தேடல்

ஜார்கண்டில் ஜனாதிபதி ஆட்சி மத்திய அமைச்சரவை பரிந்துரை

புதுடில்லி: ஜார்கண்ட் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, மத்திய அமைச்சரவை, பரிந்துரை செய்துள்ளது.பீகாரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட, ஜார்கண்ட் மாநிலத்தில், பாரதிய ஜனதாவை சேர்ந்த முதல்வர், அர்ஜுன் முண்டா தலைமையிலான அரசுக்கு, 18 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட, சிபு சோரனின், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிஆதரவு அளித்து வந்தது.
இம்மாதம், 8ம் தேதி, ஜே.எம்.எம்., கட்சி ஆதரவை விலக்கி கொண்டதால், முதல்வர், அர்ஜுன் முண்டா பதவியை ராஜினாமா செய்தார்; சட்டசபையை கலைக்கும்படி, கவர்னர் செய்யது அகமதுக்கு பரிந்துரை செய்தார்.இதன்பின், மாநில அரசியல் நிலைமை மற்றும் கட்சிகளின் கூட்டணி குறித்து, மத்திய அரசுக்கு, இரண்டு அறிக்கைகளை அனுப்பி வைத்த கவர்னர், ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பினார். ஜார்கண்ட்விவகாரம் முடிவு செய்வதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜார்கண்ட் கவர்னர் செய்யது அகமது அனுப்பிய அறிக்கை குறித்துவிவாதிக்கப்பட்டது.இதன்பின், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, கவர்னர் அளித்த பரிந்துரையை ஏற்று, மேல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 800 மெகா ஹெட்சுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படை விலையை, 50 சதவீதம் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தற்போது, சி.டி.எம்.ஏ., மொபைல் ஆபரேட்டர்கள், குறைக்கப்பட்ட கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்த வேண்டும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்புதிட்டத்தில், புதிய திட்டங்களுக்கான அனுமதிஅடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில்,800மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்திற்கான அடிப்படை விலை முன்னர், 18,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இதில், 50 சதவீதம் குறைககப்பட்டுள்ளளது.அனைத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளுக்கான ஏலம், மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும், என்றார்.