தேடல்

டவுட்' தனபாலு

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: வளர்ச்சியை ஏற்படுத்தாத எந்த ஆட்சியும், இனி நீடிக்க முடியாது. வளர்ச்சியை ஏற்படுத்தாத ஆட்சியை மக்கள் விரும்புவதில்லை. குஜராத் மக்களின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு பாதை அமைத்து கொடுத்ததால் தான், அங்கு மீண்டும் அமோக வெற்றி பெற்று, முதல்வராக என்னால் பதவியேற்க முடிந்தது.
டவுட் தனபாலு: குஜராத்தையே இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வச்சிருக்கேன்... என்கிட்ட பிரதமர் பதவியை கொடுத்தா, ஒட்டுமொத்த இந்தியாவையும், குஜராத் மாதிரி வளர்ச்சியடைய செய்வேன்னு, சூசகமா சுட்டிக்காட்டுறீங்களோன்னு தான், எனக்கு, டவுட்!
முதல்வர் ஜெயலலிதா: எம்.ஜி.ஆர்., இருந்தவரை, தி.மு.க.,வை தோற்கடித்து எதிர்க்கட்சி ஆக்கினார். அவரது வழியை பின்பற்றி, அவரின் ஆசியோடு, நாம், 1991லும் சரி, இப்போது, 2011லும் சரி, பிரதான எதிர்க்கட்சி என்னும் தகுதியை எட்டுவதற்கும் இயலாத நிலைக்கு தி.மு.க.,வை தள்ளி வீழ்த்தியிருக்கிறோம்.

டவுட் தனபாலு: சரியா தான் சொல்லியிருக்கீங்க... அதே நேரத்துல, 1996லயும், 2006லயும் அ.தி.மு.க.,வை வீழ்த்தி, தி.மு.க., ஆட்சிக்கு வந்துச்சே... அதுல, 1996ல பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாம, உங்க கட்சி படுதோல்வி அடைஞ்சதை, மறந்துட்டீங்களோன்னு தான், எனக்கு, டவுட்!

உ.பி., மாநில உயர்கல்வி துறை சிறப்பு செயலர் அனிதா மிஸ்ரா: ரேபரேலியில், மத்திய பெண்கள் பல்கலை அமைக்க, 500 ஏக்கர் நிலம் ஒதுக்கும்படி, மாநில அரசிடம், மத்திய மனித வள அமைச்சகம் அனுமதி கோரியது. முதல்வர் அகிலேஷ் யாதவ், கடந்த, 14ம் தேதி, இதற்கு சம்மதம் தெரிவித்தார். பல்கலைக்கு தேவையான நிலமும், அடையாளம் காணப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: சோனியா தொகுதியில, மத்திய பெண்கள் பல்கலை அமைக்கிறது நல்ல விஷயம் தான்... இதே அக்கறையை, மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, அமல்படுத்துறதுலயும் காட்டுனா என்னங்கிறது தான், என்னோட, டவுட்!