தேடல்

டிசம்பரில் பங்கு வெளியீடு: ரூ.13,163 கோடி திரட்டல்:கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனை

மும்பை:நடப்பு டிசம்பர் மாதம் 20ம் தேதி வரையிலுமாக, இந்திய நிறுவனங்கள், புதிய மற்றும் இரண்டாவது பங்கு வெளியீடு, கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனையின் (ஓ.எப்.எஸ்.,) வாயிலாக, 13,163 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. இது, கடந்த 10 ஆண்டுகளில், (டிசம்பரில் மட்டும்) இல்லாத சாதனை அளவாகும்.பங்கு வர்த்தகம்:நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.


இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு உள்ளது என்றே சொல்லலாம்.மத்திய அரசு, முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், பல சலுகை திட்டங்களை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும், பங்கு வர்த்தகமும் நன்கு இருக்குமென, ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.மத்திய அரசின், ஊக்குவிப்பு திட்டங்களால், அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பாண்டில் இதுவரையிலுமாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 1.27 லட்சம் கோடி ரூபாயை (2,300 கோடி டாலர்) தாண்டியுள்ளது.


இது, 14 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, அதிகளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடாகும்.கடந்த 2002ம் ஆண்டு, 2008 மற்றும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதங்களில், எந்த ஒரு நிறுவனமும், பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில், 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான், 10 பங்கு வெளியீடுகள் மூலம், நிறுவனங்கள், 6,942 கோடி ரூபாயை திரட்டியிருந்தன.


மத்திய அரசு:அதற்கு பிறகு, நடப்பு டிசம்பர் மாதத்தில் தான், நிறுவனங்கள், அதிக அளவிற்கு, பங்கு வெளியீடுகள் வாயிலாக, நிதியை திரட்டிக் கொண்டுள்ளன. இம்மாதத்தில், இதுவரையிலுமாக, எட்டு நிறுவனங்கள், பங்கு வெளியீடுகளை மேற்கொண்டுள்ளதாக பங்கு சந்தை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள,மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.நடப்பு டிசம்பர் மாதத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி., நிறுவனத்தின், 10 சதவீத பங்கு விற்பனை வாயிலாக, 6,000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளது.இது தவிர, பார்தி இன்ப்ராடெல், "கேர்' ரேட்டிங்ஸ் மற்றும் பி.சி. ஜுவல்லர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமாக, ஒட்டு மொத்த அளவில், 5,600 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.


ரிலையன்ஸ் பவர்:மேற்கண்ட நிறுவனங்கள் தவிர, கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீடு மூலம், ஹனிவெல் ஆட்டோமேஷன், ரிலையன்ஸ் பவர், ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் எஸ்.டி.ஐ. இந்தியா ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொகையை திரட்டிக் கொண்டுஉள்ளன.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அன்னிய நிதி நிறுவனங்களுக்கு விடுமுறையாக உள்ளது. பொதுவாக, விடுமுறை காலம் முடிந்த பிறகு, அன்னிய நிதி நிறுவனங்கள், உலகளவில், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது குறித்து திட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.


எனவே, வரும் புத்தாண்டில், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதானி எண்டர்பிரைசஸ் :இந்நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனை மூலம், 2.30 கோடி பங்குகளை விற்பனை செய்து, 650 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், பங்கு ஒன்றை, 282 ரூபாய் என்ற விலையில், விற்பனை செய்ய உள்ளது.


இதன் பங்கு வெளியீடு, வரும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.நடப்பு ஆண்டில், 8 - 9 மாதங்கள், நாட்டின் பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதனால், புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. இனி, பங்கு வர்த்தகம் சூடுபிடிக்கும் நிலையில், புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.