தேடல்

டீசல் கார்களுக்கு கூடுதல் இன்ஷூரன்ஸ் பிரிமியம் ஏன்?

பெட்ரோல் கார்களை விட, டீசல் கார்களுக்கு கூடுதல் இன்ஷூரன்ஸ் பிரிமியம் வசூலிக்கப்படுவது நீண்ட நாட்களாக இருந்து வரும் நடைமுறை தான்.பெட்ரோல் கார்களை விட, டீசல் கார்களுக்கு, கூடுதலாக, 10 சதவீதம் முதல், 15 சதவீதம் வரை பிரிமியம் தொகை, கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த வித்தியாசம், 20 சதவீதம் முதல், 22 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது தான், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: பெட்ரோல் காரை விட, டீசல் காரின் விலை, மாடலுக்கு ஏற்ப, ரூ.50 ஆயிரம் முதல், ரூ.70 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும். சொகுசு கார்களின் விலையில் இந்த வித்தியாசம், ஒரு லட்சம் ரூபாயையும் தாண்டும். இப்படி, விலை அதிகமாக இருப்பதால் தான், கடந்த காலங்களில், கூடுதல் இன்ஷூரன்ஸ் பிரிமியம் தொகை, டீசல் கார்களுக்கு வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த பிரிமியம் தொகையும் அதிகரித்து இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.


அதிக பயன்பாடு, உதிரிபாகங்களின் கூடுதல் விலை, பாரமரிப்பு செலவு அதிகரிப்பது ஆகியவை தான், டீசல் கார்களின் மீதான இன்ஷூரன்ஸ் பிரிமியம் தொகை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. வாடகை கார்கள் பயன்பாட்டுக்கு, டீசல் கார்கள் தான் அதிகம் உபயோகிக்கப்படுகின்றன. பெட்ரோல் கார் என்றால், ஒரு நாளைக்கு, 15 கி.மீ., முதல், 30 கி.மீ., வரை தான் ஓட்டுவர். அதே நேரத்தில், டீசல் கார் என்றால், 50 கி.மீ., முதல், 100 கி.மீ., வரை ஓட்டுகின்றனர். இப்படி, டீசல் கார் பயன்பாடு அதிகம் என்பதால், அந்த காரின் உதிரிபாகங்களை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், டீசல் இன்ஜின் பாரமரிப்பு செலவும் அதிகம். நீண்ட தூரம் ஓட்டுவதால், விபத்துக்கான "ரிஸ்க்'கும் அதிகம். இதுவே, பிரிமியம் தொகை அதிகரிக்க, முக்கிய காரணம். டீசல் கார் மட்டுமல்ல, சுற்று சூழலுக்கு உகந்த, சி.என்.ஜி., காஸ் வசதி பொருத்தப்பட்ட கார்களுக்கும், கூடுதல் பிரிமியம் தொகை தான் வசூலிக்கப்படுகிறது. ஒருவர், சொந்தமாக கார் வாங்கி, சில ஆண்டுகளுக்கு சென்ற பிறகு, அந்த காரில், “சி.என்.ஜி., கிட்’ பொருத்துகிறார். இந்த, “சி.என்.ஜி., கிட்டின் விலை, ரூ.45 ஆயிரம் வரை உள்ளது. கார் இன்ஷூரன்ஸை புதுப்பிக்க செல்லும், போது, இந்த, "சி.என்.ஜி., கிட்' டின் விலையை கணக்கிட்டு, பிரிமியம் தொகையில், 4 சதவீதம், கூடுதலாக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.