தேடல்

டாட்டா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி நாளை பொறுப்பேற்பு

மும்பை:டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக, சைரஸ் மிஸ்திரி, 44, நாளை முறைப்படி பொறுப்பேற்கிறார்.டாட்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து, கடந்த 28ம் தேதி, வெள்ளிக்கிழமை, ரத்தன் டாட்டா, ஓய்வு பெற்றார். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், சைரஸ் மிஸ்திரி, நாளை (திங்கட்கிழமை) அதிகார பூர்வமாக, பொறுப்பேற்பார் என, டாட்டா குழும வட்டாரம் தெரிவித்துஉள்ளது.


இங்கிலாந்தில் பொறியியல் பட்டமும், லண்டன் வணிக கல்வி மையத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ள சைரஸ் மிஸ்திரி, கடந்த 2011ம் ஆண்டு டாட்டா குழுமத்தின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இவரது குடும்ப நிறுவனமான, ஷபூர்ஜி பலோன்ஜி, டாட்டா குழும நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள, டாட்டா சன்ஸ் நிறுவனத்தில், 18 சதவீத பங்குகளை வைத்துள்ளது.


இதனிடையே, சென்ற வெள்ளியன்று, ஓய்வு பெற்ற ரத்தன் டாட்டா, மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லாமல், புனேவில் உள்ள டாட்டா மோட்டார்ஸ் தொழிலாளர்களுடன், தமது, 75வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.