தேடல்

டென்னிஸ் சர்ச்சைக்கு தீர்வு என்ன * மத்திய அரசு தலையிடுமா

புதுடில்லி:அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,), வீரர்கள் இடையிலான பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு தலையிட வேண்டும் என, போராட்ட வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்.சம்பள பிரச்னை உள்ளிட்ட பவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவின் டாப்-11 வீரர்கள் சோம்தேவ் தலைமையில் போராடி வருகின்றனர். ஏ.ஐ.டி.ஏ.,யின் சமாதானத்தை ஏற்க மறுத்ததால், தென் கொரியாவுக்கு எதிராக விளையாடும், டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்க, இரண்டாம் தர வீரர்களை ஏ.ஐ.டி.ஏ., தேர்வு செய்தது. இதற்கு சோம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதனிடையே வீரர்கள் விவரத்தை அனுப்ப வரும் 22ம் தேதி கடைசித் தேதி என்பதால், மத்திய அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என, போராடும் வீரர்கள் எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர்.இதுகுறித்து வீரர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டேவிஸ் கோப்பை போன்ற முக்கியமான தொடரில், அனுபவம் இல்லாத வீரர்களை தேர்வு செய்தது ஏன் என்ற ரகசியத்தை ஏ.ஐ.டி.ஏ., வெளிப்படுத்த வேண்டும். இதுகுறித்து, கடந்த சில வாரங்களாக நடந்த ஏ.ஐ.டி.ஏ.,யின் செயல்பாடுகள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அமைச்சர் இதில் தலையிட்டு நல்ல முடிவு காண்பார் என நம்புகிறோம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மறுப்பு:மத்திய விளையாட்டுத்துறை செயலர் பி.கே.தேப் கூறுகையில், நாங்கள் யோசனை மட்டும் தான் தரமுடியும். மற்றபடி, அணித் தேர்வின் அனைத்து உரிமைகளும் ஏ.ஐ.டி.ஏ.,க்கு உள்ளது. இவ்விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது, என்றார்.முடிந்த கதை:ஏ.ஐ.டி.ஏ., தலைமை அதிகாரி ஹிரோன்மாய் சாட்டர்ஜி கூறுகையில்,தென் கொரியாவுக்கு எதிரான அணி தேர்வு என்பது முடிந்து போன விஷயம். ஒருவேளை பிரச்னை தீர்ந்தால் அடுத்து ஏப்ரல் மாதத்துக்கான போட்டிக்கு வேண்டுமானால், புதிய அணி திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பழிவாங்கும் வகையில் செயல்பட மாட்டோம், என்றார்.