தேடல்

தொடும் உயரத்தில் மின் கம்பி அச்சத்தில் பொதுமக்கள்

வேளச்சேரி: உயிருக்கு உலை வைக்க கூடிய அளவிற்கு,தாழ்வாக செல்லும் மின் கம்பியை, மேலே உயர்த்தி கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளச்சேரி, பாலாஜி காலனி பிரதான சாலை மற்றும் 4வது தெருவில், உயர் மின் அழுத்த கம்பிகள் உள்ளன. இதில், நான்கு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பி ஒன்று, தாழ்வான நிலையில், செடி, கொடிகள் மற்றும் வீட்டு கட்டடங்களில் உரசியபடி செல்கிறது. மழையால், செடிகளை தொட கூட, மக்கள் அஞ்சுகின்றனர். லாரி, டெம்போ போன்ற வாகனங்கள், இந்த சாலை வழியாக சென்றால், மின் கம்பியில் உரசி, பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துண்டிக்கப்பட்ட மின் கம்பியை, சில இடங்களில் இணைத்து, கம்பி போட்டு கட்டி உள்ளனர். பலத்த காற்று வீசி, மின் கம்பி அறுந்து, விபத்து நிகழாதிருக்க, மின் கம்பியை உயர்த்தி கட்ட, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.