தேடல்

தடியன்குடிசையில் அத்திப்பழம் சீசன் துவக்கம்

தாண்டிக்குடி: உடலுக்கு புத்துணர்வை அளித்து இருதய நோயை குணப்படுத்தும் திம்லா அத்திப் பழம் தடியன்குடிசையில் காய்த்து குலுங்கிறது. திண்டுக்கல் மாவட்டம் தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் திம்லா அத்தி மரம் ஆய்வுக்கு வளர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு காய்கள் காய்த்து பலனித்து வருகிறது. பொதுவாக ஆப்கான், புனே வகை அத்தி மரங்கள் உள்ளன. திம்லா அத்தியை பொறுத்தமட்டில் மாறுபட்ட குணங்கள் நிறைந்தது.
அத்தி பூத்தாற் போல் என்பதற்கிணங்க பூக்கள் தோன்றாமல் காய்கள் மரங்களில் உருவாகிறது. மார்க்கெட்டில் தற்போது ஒருகிலோ ரூபாய்100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. இரும்பு சத்து, நார்சத்து நிறைந்துள்ள பழமாகும். இவை உடலில் சிவப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரித்து, புத்துணர்வை ஏற்படுத்துகிறது. பதியன் முறையில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் நடவு செய்த 3 முதல் 5 ஆண்டுகளில் பலனுக்கு வரும். அத்தி கன்றுகள் தேவைக்கு தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை 04542-224-225 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.