தேடல்

டிராவிட் வீடியோ பார்த்து பாடம் * இங்கிலாந்து சூப்பர் திட்டம்

ஆமதாபாத்:இந்திய சுழலை சமாளிக்க, டிராவிட்டின் பழைய வீடியோவை பார்த்து பேட்டிங் நுணுக்கங்களை கற்க இங்கிலாந்து வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில், இங்கிலாந்து அணியினர் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் திணறுவர். எதிர்வரும் இந்தியத் தொடரிலும் சுழல் சோதனை தொடரும் என, இங்கிலாந்து வீரர்கள் நம்புகின்றனர்.இந்நிலையில், ஓய்வு பெற்ற இந்திய வீரர் டிராவிட், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் வீடியோ படக்காட்சிகளைப் பார்த்து, பாடம் கற்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து வீரர் இயான் பெல் கூறுகையில்,சுழற்பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது டிராவிட் எப்படி கால்களை நகர்த்தி விளையாடுகிறார், பந்தை அடிக்கும் போது என்ன செய்கிறார் என்பதை, அவரது வீடியோவை பார்த்து கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளோம், என்றார்.வெற்றிக்கு முயற்சிப்போம்:மற்றொரு இங்கிலாந்து வீரர் பிரையர் கூறியது:இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எப்போதுமே சவாலானது. இங்கு டெஸ்ட் தொடரை வென்று 28 ஆண்டுகள் ஆகியுள்ளது. இம்முறையும் டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும்.இருப்பினும், இந்திய பவுலர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதைப் பொறுத்து தொடரின் முடிவு அமையும். கடந்த காலங்களில் செய்த தவறுகளை தவிர்த்து, வெற்றிக்கு முயற்சிப்போம்.ஸ்டிராஸ் இழப்பு:கடந்த 2006ல் பிளின்டாப், 2008ல் ஸ்டிராஸ் தலைமையில் வந்த அணிகளை விட இப்போதுள்ள அணி அதிக அனுபவம் வாய்ந்தது. பீட்டர்சன், இயான் பெல், அலெஸ்டர் குக் ஆகியோர் இந்தியாவில் விளையாடியுள்ளனர். அதேநேரம், டாப் -ஆர்டரில் அனுபவ ஸ்டிராஸ் இல்லாதது இழப்பு தான்.ஏனெனில், சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்ளும் திறன்படைத்த இவர் போட்டியின் முடிவை மாற்றி விடுவதில் வல்லவர். அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டீவன், ஸ்டூவர்ட் பிராட் இருவரும் முதல் டெஸ்ட் துவங்கும் முன் குணமடைந்து விடுவர் என நம்புகிறோம்.இவ்வாறு பிரையர் கூறினார்.