தேடல்

டெல்டா விவசாயிகளுக்கு 400 மெகாவாட் மின்சாரம்: அமைச்சர்

சென்னை:காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு,400 மெ.வா., மின்சாரம் வழங்கப்படுகிறது, என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்:
சந்திரகுமார் - தே.மு.தி.க.,: கரும்பு விவசாயிகளுக்கு, டன் ஒன்றிற்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும். மஞ்சளுக்கு, 6,000 ரூபாய் வரை விலை போகிறது. ஆனால், சாகுபடிக்கான செலவு, 8,000 ரூபாய் வரை ஆகிறது.
கர்நாடகத்தில், மஞ்சள் விவசாயி களுக்கு, 1,000 ரூபாய் கொடுப்பது போல், தமிழகத்திலும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதுவரை செய்யவில்லை.
வேளாண்துறை அமைச்சர் தாமோதரன்: தமிழகத்தில், கரும்பிற்கு 2,350 ரூபாய் வழங்கப்படுகிறது. உற்பத்தி செலவு டன்
ஒன்றிற்கு, 1,870 ரூபாய் மட்டுமே ஆகிறது. இதில், விவசாயிகளுக்கு லாபம் தான். இந்தாண்டில்,
தமிழகத்தில், 44 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இந்தாண்டில் கரும்பு அதிகளவில் கிடைக்கும்.
சந்திரகுமார்: காவிரியில் இருந்து நீர் எடுக்க, விவசாயிகளுக்கு, 12 மணிநேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடை மடை
விவசாயிகளுக்கு, இது சென்று சேரவில்லை.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி: 12 மணிநேரம் மின்சாரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும், திருவாரூர் பகுதியில் தரையை தோண்டினால், ஐந்து அடியில் உப்புநீர் தான் வருகிறது. பூகோள ரீதியான பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும். டெல்டா பகுதிகளுக்கு தினசரி, 400 மெ.வா., மின்சாரம் வழங்கப்படுகிறது.
சந்திரகுமார்: இந்தாண்டு,
இலவச வேட்டி சேலை திட்டத்தில், பெரும்பாலும் வெளியில்
கொள்முதல் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சீருடையிலும் இதே நிலைதான்.
கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர் ராஜ்: கூட்டுறவு நூற்பாலைகள் மூலம், 1.78 வேட்டி, 1.78 சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பற்றாக் குறைக்கு, வெளியில் இருந்து, 46 ஆயிரம் வேட்டி, 14 ஆயிரம் சேலைகள் வாங்கப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் பன்னீர் செல்வம்: நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை அளிக்கவேண்டும் என்பதற்காக, அவர்கள் நெசவு செய்த வேட்டி,சேலைகள்
வாங்கப்பட்டுள்ளன. அவர்களால் முடியாத நிலையில் தான்
வெளியில் வாங்கப்பட்டுள்ளது. தற்போது, கூட்டுறவு சங்கங்களில் எந்த இருப்பும் இல்லை.
சந்திரகுமார்: அரசு பள்ளியில் படித்து, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. லேப்டாப் வழங்கப்படவில்லை என,
மாணவர்கள் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்: கடந்தாண்டில், 9.10 லட்சம் லேப்டாப்கள், டெண்டர் மூலம், தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு, 2.5 லட்சம் லேப்டாப்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக, விவாதம் துவங்கிய போது, அமைச்சர் தாமோதரன், சந்திரகுமார் கேட்ட கேள்விக்கு, வேறு பதில் அளித்ததாக கூறி சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, சந்திரகுமாரை பார்த்து,
அமைச்சர்கள் நிதானமாக பேசுங்கள் என்றதும், சந்திரகுமார், நாங்கள் நிதானத்துடன் தான் இருக்கிறோம், என்றார்.
அப்போது,நிதியமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, சந்திரகுமார் பச்சை மிளகாய் சாப்பிட்டு வந்திருப்பார் போலிருக்கிறது. பிரஷர் இருந்தால் அதற்கான மாத்திரை சாப்பிட்டு வாருங்கள், என்றதும், சபையில் சிரிப்பலை எழுந்தது.