தேடல்

டில்லியில் இதுவரை 635 கற்பழிப்பு; 1க்கு மட்டும் தண்டனை

புதுடில்லி: இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை, தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.

ஆண்டு வாரியாக விவரம் : @@கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .

கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.