தேடல்

"டாஸ்மாக்' கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை:மதுக்கடைகளை மூட கோரி, பூட்டு போடும் போராட்டத்தை பா.ம.க., அறிவித்துள்ளதால், சென்னையில், டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடைகளை மூட கோரி, பா.ம.க.,வினர், இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மாலை வரை, பா.ம.க.,வினர், 250 பேரை, போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்ட அறிவிப்பை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை பணி நேரம் முடிந்த பின்பும், ஊழியர்கள் கடைகளிலேயே தங்கியிருக்க வேண்டும், கடையை மூடக்கூடாது, என, டாஸ்மாக் நிர்வாகம், ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேநேரம், விற்பனை செய்ய கூடாது எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளை இரவிலும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது, இதுவரை இல்லாத நடைமுறை; அரசின் இந்த முடிவு சரியல்ல, என, டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.