தேடல்

தண்ணீர் பிரச்னை

கொம்மகோவில் பகுதி குடியிருப்பினர் எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி வாழ்வதுடன், புழுக்களுடன் கூடிய தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்துக்கு உப்பட்ட கிராமம் கொம்மகோவில்.
இப்பகுதியில் மொத்தம், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்களில் பெரும்பாலும் பனியன் கம்பெனி, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிக்கு செல்கின்றனர்.
வடமுக வெள்ளோடு பஞ்சாயத்தை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
பஞ்சாயத்து தலைவராக சின்னுசாமி உள்ளார். இப்பகுதியினர் எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி அவதியுறுகின்றனர். பஞ்சாயத்து சார்பில் ஊருக்கு நடுப்பகுதியில் குடி தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத இத்தண்ணீரை இப்பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தண்ணீரை பிடித்த ஓரிரு நாளில், தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி விடுகின்றன. இதனால், இப்பகுதியினர் பலவிதமாக நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பகுதி குடியிருப்புக்கு அருகே சிறிய பாலத்துடன் கூடிய சாக்கடை கால்வாய் உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத சாக்கடையில், கழிவுகள் தேங்கி நிற்கின்றன.
சாக்கடை ஓரங்களில் முட்புதர்கள் மண்டி, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. பார்த்தீனியம் செடியும் காடு போன்று வளர்ந்துள்ளது. குடியிருப்புகளை சுற்றிலும் முற்புதர்கள் மண்டியிருப்பதால், இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், இப்பகுதியினர் நடமாடவே அஞ்சி வருகின்றனர். அதேபோல் ஊருக்கு நடுவே செல்லும் மண்சாலை, தார்சாலையின்றி பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. வனாந்தரம் போல் காட்சியளிக்கும் கொம்மகோவில் குடியிருப்புக்குள் சுகாதாரக்கேடு அதிகளவில் உள்ளது. அள்ளப்படாத குப்பைகள், தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகள், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம், தார்சாலை வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி பொதுமக்கள் அல்லோலப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
ரத்தினசபாபதி: 1949 கர்ணமாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றேன். இப்பகுதியில் கடந்த, 50 ஆண்டுகளாக குடியிருக்கிறேன்.
இப்பகுதியில் சாக்கடை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. பஞ்சாயத்து தலைவர் உட்பட, பலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
ராஜேஸ்வரி: சாக்கடையில் தேங்கி நிற்கும் தண்ணீரால், கிணற்று நீர் முழுக்க மாசடைந்துள்ளது.
பஞ்சாயத்து தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை இருப்பு வைக்க முடியவில்லை. ஓரிரு நாட்களில் குடம் மற்றும் பாத்திரம் முழுக்க புழுக்கள் உற்பத்தியாகி விடுகிறது.
இப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் குப்பை தொட்டி ஏதும் வைக்கப்படவில்லை. இதனால் தெரு முழுக்க எங்கு பார்த்தாலும் குப்பை கூழமாக காட்சியளிக்கிறது.
கவிதா: நான் இப்பகுதிக்கு சமீபத்தில் தான் குடி வந்தேன். தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அதேபோல் குப்பை அள்ள யாரும் வருவதில்லை. எனது கடைக்கு அருகே பார்த்தீனியம் செடி ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ரங்கசாமி: இப்பகுதியில் கடந்த, 44 ஆண்டுகளாக குடியிருக்கிறேன். சாலைவசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி அவதியுறுகிறோம். பாதாள சாக்கடையில் தேங்கி நிற்கும் கழிவால், குடியிருப்புக்குள் கொசுக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கலையரசி: இப்பகுதிக்கு சமீபத்தில் தான் குடிவந்தேன். குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளதை சரிசெய்ய வேண்டும்.
அண்ணம்மாள்: நான் பிறந்து வளர்ந்ததே இந்த ஊரில் தான். வீதி சுத்தமாக இல்லை. ரோடு வசதியில்லை. தண்ணீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது.