தேடல்

நகர்நல அலுவலரை கண்டித்து பூட்டுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலரால் பரபரப்பு

தஞ்சாவூர்: நகராட்சி கூட்டத்துக்கு, நகர்நல அலுவலரின் பணியில் அதிருப்தி தெரிவித்து, அவரது அலுவலகத்தை பூட்டுமாறு கூறி, கையில் பூட்டுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை நகராட்சிக்கூட்டம் தலைவர் சாவித்திரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், வழக்கு குறித்து வெளியூர் சென்றிருந்ததால், கமிஷனர் ரவிச்சந்திரனும், இரண்டு நாள் விடுமுறையில் இருப்பதால், நகர் நல அலுவலர் சிவனேசனும் பங்கேற்கவில்லை. இதனால் இன்ஜினியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இந்நிலையில், கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர்கள் அவரவர் இருக்கையில் வந்தமர்ந்தனர். அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர் கனகராஜ், கையில் பூட்டுடன் கூட்டத்தில் பங்கேற்று, நகர் நல அலுவலர் பணி திருப்தியாக இல்லை, அதனால், அவரது அலுவலகத்தை பூட்ட வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கவுன்சிலர் கனகராஜ் கூறுகையில், தஞ்சை நகராட்சி பகுதியில் சுகாதார பணிகளை நகர் நல அலுவலர் சிவனேசன் சரிவர செய்யாமல், அலட்சியம் காட்டி வருகின்றார். தஞ்சை பஸ்ஸ்டாண்ட் அருகே இருந்த குப்பைக்கிடங்கு பகுதியில், 150 ஆண்டு பழமையான லாந்தர் விளக்கு தூண் மாயமாகி விட்டது. நகராட்சி பணியில் சேகரிக்கப்பட்ட, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேக்குமரத்தை நகர்நல அலுவலர் சிவனேசன் கடத்தி விட்டார், என கவுன்சிலர் கனகராஜ் குற்றம்சாட்டினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
காயத்ரி (அ.தி.மு.க.,): 28வது வார்டில் துப்புரவு பணியாளர்கள் போதிய அளவில் பணி செய்வதில்லை. இதனால், வார்டு பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, போதிய அளவில் பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.
சதாசிவம் (தி.மு.க.,): நகராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில், குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுகிறதா? என, கண்காணிக்க தனியாக நகராட்சி சார்பில் உதவி பொறியாளரை நியமித்து, கண்காணிக்க வேண்டும்.
தலைவர் சாவித்திரி: நகராட்சியில் போதிய பணியாளர்கள் எண்ணிக்கையில் இல்லை. அதனால், துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உரிய பணியாளர்களை நியமிக்க, அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. விரைவில், நகராட்சிக்கு அரசாணை கிடைத்தவும், போதிய பணியாளர் நியமிக்கப்படுவர். அப்போது, உதவி பொறியாளர் பணியிடம் ஏற்படுத்தி, கவுன்சிலர் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
ஷர்மிளாதேவி (தி.மு.க.,): எனது வார்டு பகுதியில் ஐந்து பூங்கா, கழிப்பிடம் உள்ளது. இதனை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியன் (தி.மு.க.,): போதிய அளவில் வார்டுகளுக்கு துப்புரவு பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
ராமநாதன் (தி.மு.க.,): பெரியகோவில் முன், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக, கோவிலை விட்டு, 300 அடி தூரத்தில் நடைமேம்பாலம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகராட்சியில் நடைமேம்பாலம் அமைத்துள்ளனர். அதேபோல, தஞ்சையில் அமைத்தால், பயணிகள் சிரமம் வெகுவாக குறையும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க, 13 அம்ச திட்டம் கொண்டு வந்ததற்கும், டெல்டா விவசாயிகளுக்காக கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதற்கும், பொங்கல் பரிசு பை திட்டம் அறிவித்ததற்கும் முதல்வர் ஜெ.,வுக்கு நன்றிகூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து கூட்டம் நிறைவுக்கு வந்தது.