தேடல்

நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

கருகும் சம்பா பயிரை காப்பதற்காக, காவிரியில் தமிழகத்திற்கு 20 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இம்மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விவாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் டிசம்பர் 31ம் தேதிக்குள் வெளியிடுவதாக மத்திய அரசு அளித்த உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு வக்கீல், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை வெளியிடுவதற்கு கர்நாடகா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும், மேலும் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை எதிர்பார்ப்பதால் அரசிதழில் வெளியிடவில்லை என கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கடந்த விசாரணையின் போது, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஆட்சேபணை இல்லை என தெரிவித்த கர்நாடகா, தற்போது எதிர்ப்பது ஏன் என்று வினவினர். மேலும், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து வரும் 31ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக வரும் ஜனவரி 11ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக்குழுவை கூட்டி, தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு தேவையான தண்ணீர் அளவு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியும் வழக்கை வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.