தேடல்

நஷ்டத்தில் அரசு கேபிள் கார்ப்பரேஷன் போட்டு உடைத்தார் பொதுமேலாளர்

சேலம்: தமிழகத்தில், அரசு கேபிள், டிவி கார்ப்பரேஷன் மூலம், மாதந்தோறும், 11 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கட்டண சேனல்களுக்கு, 14.5 கோடி ரூபாய் வழங்கப் படுவதால், 3.50 கோடி ரூபாய் நஷ்டத்திலேயே, கேபிள், டிவி கார்ப்பரேஷன் இயங்கி கொண்டிருக்கிறது. கேபிள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆபரேட்டர்கள் முன்வரவேண்டும், என, அதன் பொதுமேலாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கேபிள், டிவி கார்ப்பரேஷன் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கேபிள் டிவி கார்ப்பரேஷன் பொதுமேலாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.எஸ்.ஓ.,க்கள், கேபிள் ஆபரேட்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தாலுகா வாரியாக, ஒவ்வொரு கேபிள் ஆபரேட்டரும் அழைக்கப்பட்டு, அவர்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. ஒவ்வொருவரும், தங்களுடைய பகுதியில் உள்ள குறைபாடுகள், கேபிள் துணை மேலாளர் சந்திரசேகரன் நடவடிக்கை, இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுதல் உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், கேபிள் பொதுமேலாளர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:

கடந்த, 2008ம் ஆண்டில், அரசு கேபிள், டிவி கார்ப்பரேஷன் செயல்பட துவங்கியது. ஆனால், சரியான முறையில் செயல்படுத்தாததால், அத்திட்டம் நின்று போனது. அந்த காலக் கட்டங்களில், வெறும், 4.94 லட்சம் ஆபரேட்டர்கள் மட்டுமே, அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். 2011 செப்டம்பர், 2ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, அரசு கேபிள் டிவி கார்ப்ப ரேஷனுக்கு புத்துயிர் ஊட்டினார். அதைத்தொடர்ந்து, கேபிள் ஆபரேட்டர்கள் பலர், அரசுடன் இணைந்தனர். தற்போதைய நிலவரப்படி, 60 லட்சம் கேபிள் ஆபரேட்டர்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர்.

மாதந்தோறும், பொதுமக்களிடம், 70 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதில், 20 ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும். ஆபரேட்டர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில், கட்டண சேனல்களிடம் பேச்சு நடத்தி, தற்போது, 100 சேனல்கள் வரை ஒளிபரப்பாகிறது. இந்த கட்டண சேனல்களுக்காக, மாதந்தோறும், 14.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில், 17 கோடி ரூபாய், சன் டிவி கேட்டது. அவ்வளவு கொடுக்க முடியாது என மறுத்தோம். அதன்பின், மூன்று கோடி ரூபாய்க்கு கொடுக்க முன்வந்தனர். சன் டிவிக்கு மூன்று கோடி ரூபாய், இதர சேனல்களுக்கு, 11.5 கோடி ரூபாய் என, 14.5 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் மாத வசூல், எட்டு கோடி ரூபாய். உள்ளூர் சேனல்கள் மூலம், மூன்று கோடி ரூபாய். மொத்தம், 11 கோடி ரூபாய் மட்டுமே வரவாக கிடைக்கிறது. இதனால், 3.5 கோடி ரூபாய் மாதந்தோறும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இணைப்புகள் எண்ணிக்கையை ஆபரேட்டர்கள் குறைவாக காட்டுவதாக புகார் உள்ளது. முதல்வர், கேபிள் ஆபரேட்டர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளார். அதனால் தான், புதிய ஆபரேட்டர்கள் யாரையும் நியமிக்காமல், பழைய ஆபரேட்டர்களை கொண்டே செயல்படுத்தி வருகிறோம். ஆபரேட்டர்களும், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசுக்கு வருவாய் இழப்பு பல கோடி :@@ தமிழகத்தில், மற்ற மாவட்டங்களை விட, சேலத்தில் கேபிள் இணைப்புகள் எண்ணிக்கை அதிகம். இங்கு, 9.24 லட்சம் இணைப்புக்கு வெறும், 3.23 லட்சம் இணைப்புகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. பாலிமர், சி.டி.என். ஸ்கைநெட் போன்ற எம்.எஸ்.ஓ.,க்கள், அவர்களை சார்ந்துள்ள ஆபரேட்டர்கள், தங்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான இணைப்புகளை காட்டாமல், பெயரளவுக்கு கணக்குக்காட்டி, அதன் மூலம் லாபமடைந்து வருவதாகவும், கேபிள், டிவி தலைவரும், அதிகாரிகளும், இதற்கு உடந்தையாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

அதே நேரத்தில், சிறிய கேபிள் ஆபரேட்டர்கள், 100 இணைப்பை குறைத்து காட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான இணைப்பை மறைக்கும் கேபிள் நிறுவனங்கள், மாதந்தோறும், பல கோடி ரூபாய் லாபம் பார்க்கின்றனர். அரசு கேபிள், டிவி கார்ப்பரேஷன் தலைவர், ஆய்வு என்கிற பெயரில், கண் துடைப்பாக மாவட்டங்களுக்கு வந்து செல்கிறார். அரசு கேபிள், டிவி மூலம் கிடைக்க வேண்டிய வருவாய், தலைவர், அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு தான் செல்கிறது. தமிழக முதல்வர், கேபிள், டிவி குறித்து விசாரிக்காவிட்டால், தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட நிலை தான், தற்போதைய ஆட்சியிலும் ஏற்படும் என, கேபிள் ஆபரேட்டர்கள் குமுறுகின்றனர்.