தேடல்

நீண்ட தூர கார் பயணத்தில் பாதுகாப்பான டிரைவிங் டிப்ஸ்

நடுத்தர வர்க்கத்தினருக்கு, சொந்தமாக ஒரு வீடு என்ற கனவு நிறைவேறிய பிறகு, சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது தான் அடுத்த இலக்காக இருக்கும். வசிக்கும் நகரத்தில், குறுகிய தூரத்துக்கு தான் கார் பயணம் இருக்கும். அதே நேரத்தில், எங்காவது தொலை தூரத்துக்கு, சொந்த காரில் சென்று வருவது என்பது, அனைவரின் நினைவுகளில் இருக்கும் ஒரு விஷயம். ஆனால், இதற்கான வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போது, நீண்ட தூர கார் பயணத்தில், மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகள் வருமாறு: காலியாக இருக்கும் சாலையில், வேகமாக செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கலாம். நீண்ட தூர பயணத்தின் போது, இதற்கான வாய்ப்பும் கிடைக்கும். ஆனால், வேகமாக சென்றால், சிறிது நேரத்திலேயே மனச் சோர்வுக்கு ஆளாவோம். எனவே, மிதமான வேகத்தில் செல்வது தான் சரியாக இருக்கும். மிதமான வேகத்தில் சென்றால், பெட்ரோல் செலவும் கையை கடிக்காது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, "லேன்' மாறாமல், டிரைவிங் செய்ய வேண்டும். அடிக்கடி "லேன்' மாறி பயணம் செய்வது, பிற வாகனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். விபத்துக்களும் ஏற்படலாம். நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டி செல்லும் போது, போக்குவரத்து எப்படி இருக்கும் என்பதை, முன்கூட்டியே கணிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். பிற வாகன ஓட்டிகள், எந்த நிலையில் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர் என்பதையும், கண்காணிக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தின் போது, கார் ஓட்டுபவர்கள், தங்களது மனதையும், உடலையும் தளர்வாக வைத்திருப்பது நல்லது. அதே நேரத்தில், குறுக்கே கால்நடைகளோ, பிற வாகனங்களோ வந்து விடுகிறதா என்பதையும் உஷாராக கவனிக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தின் போது, அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, கிளெச் பெடலை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. அதுபோன்ற நேரத்தில், இடது பாதத்தை, கிளெச் பெடலில் இருந்து விலக்கி, நல்ல ஓய்வு கொடுக்கலாம்.