தேடல்

"நிப்டி' உயர்வு, "சென்செக்ஸ்' சரிவு

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்ததை அடுத்து, "சென்செக்ஸ்' சரிவுடனும், "நிப்டி' சற்று உயர்வுடனும் முடிவடைந்தன.


நேற்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை, மின்சாரம், வங்கி, பொறியியல் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள், தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 20.10 புள்ளிகள் சரிவடைந்து, 19,639.72 புள்ளிகளில் நிலை பெற்றது.


வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,767.25 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,611.27 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., கோல் இந்தியா, இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஜிந்தால் ஸ்டீல், மாருதி, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 2.30 புள்ளிகள் உயர்ந்து, 5,959.20 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,990.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,953.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.