தேடல்

நீர்ப்பாசன துறையில் 70 ஆயிரம் கோடி ஊழல் ; விசாரிக்க குழு !

மும்பை: மகாராஷ்ட்டிராவில் நடந்த நீர்ப்பாசன துறை ஊழல் தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சுனில் தட்காரே அறிவித்தார். சரத்பவாரின் மருமகன் : @@கடந்த 1999 முதல் 2009 வரை இங்கு நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்து வந்தவர் அஜீத்பவார். இவர் தேசிய வாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரின் மருமகன் ஆவார். குளங்கள் தூர்வாருவது, அணை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் கான்ட்ராக்ட் விடப்பட்டது. இதில் தகுதி இல்லாத பணிகளுக்கு அனுமதி மற்றும் முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியானது. இதன் மூலம் அரசுக்கு 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு ஆளும் காங்கிரசுடன் சரத்பவார் கட்சி உறவை முறித்து கொண்டது. இதனால் துணை முதல்வராக இருந்த அஜீத்பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், நீர்ப்பாசனத்துறை ஊழல் குறித்து மகாராஷ்டிர அரசு சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், அஜித் பவார் மீது எவ்வித தவறும் இல்லை என கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவில் விசாரிக்க சிறப்பு குழுவை மாநில அரசு அறிவித்துள்ளது. நீர்ப்பாசன துறையில் வல்லுனரான மாதவ்சித்தாலே தலைமையில் குழுவினர் விசாரித்து இம்மாத இறுதிக்குள் முழு அறிக்கை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவை சேர்ந்த கட்காரிக்கும் நெருக்கடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.