தேடல்

நிலக்கடலை ஏற்றுமதி ரூ.2,808 கோடி

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டுமாத காலத்தில், நாட்டின்,நிலக்கடலை ஏற்றுமதி,அளவின் அடிப்படையில், 3.70 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதன் மதிப்பு, 2,808 கோடி ரூபாயாகும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தமிழகம்:உள்நாட்டில், ஆந்திரா, பீகார், குஜராத், அரியானா, உத்தர பிரேதசம், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் மத்திய பிரேதசம் ஆகிய மாநிலங்களில், நிலக்கடலை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவிலிருந்து, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா, சீனா, கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்றவற்றை உள்ளடக்கிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகமான அளவில், நிலக்கடலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இந்நிலையில், இந்திய நிலக்கடலையில், "அப்லடாக்சின்' என்ற வேதிப் பொருள், நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிக அளவில் இருப்பதாக கூறி, மேற்கண்ட நாடுகள், இந்திய நிலக்கடலை இறக்குமதியை குறைத்து வருகின்றன.நிலக்கடலையில்,"அப்லடாக்சின்' என்ற வேதிப் பொருளின் அளவு குறித்து, அபாய உணவு பொருள் தடுப்பு ஆய்வகத்தின் (அசார்டு) சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகியுள்ளது.


இந்த சான்றிதழ் பெறுவதற்கான, அனைத்து பணிகளையும், "அபெடா' அமைப்பு மேற் கொண்டு வருகிறது.இதையடுத்து, உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய ஏற்றுமதி நிறுவனங்களின் விவரங்களை, "அபெடா' கேட்டுள்ளது.


சான்றிதழ்:இந்நிறுவனங்கள்,"அசார்டு' சான்றிதழ் பெறும் பணிகள், வரும் ஜூன் 13ம் தேதிக்குள் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, இந்த சான்றிதழுடன் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் வித்துக்களை வெளிநாடுகள், தடையின்றி இறக்குமதி செய்து கொள்ளும் சூழல் உருவாகும்.


அதே சமயம், நச்சுக் கலப்பற்ற நிலக்கடலை சாகுபடி குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய வேளாண் அமைச்சகம் மேற் கொள்ள உள்ளது.இதனால், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.