தேடல்

நெல் கொள்முதல் 2.20 கோடி டன்னை தாண்டியது

புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தைப் பருவத்தின் (அக்.,- செப்.,) ஜனவரி வரையிலான காலத்தில், மத்திய அரசு, முகமை அமைப்புகளின் வாயிலாக, 2.23 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை (2.17 கோடி டன்) விட, 5 சதவீதம் அதிகமாகும்.


இலக்கு:மத்திய அரசு, சென்ற 2011-12ம் சந்தைப் பருவத்தில், 3.50 கோடி நெல்லை கொள்முதல் செய்திருந்தது. இந்நிலையில், நடப்பு பருவத்தில், 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.நடப்பு பருவத்தின், ஒட்டு மொத்த நெல் கொள்முதல் இலக்கில், தற்போதே, 50 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. மதிப் பீட்டு காலத்தில், பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களின் வாயிலாக அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பங்களிப்பு சரிவடைந்து உள்ளது.


ஆந்திரா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தவிர, ஏனைய மாநிலங்களில் நெல் கொள் முதல் நடவடிக்கை நிறை வடைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில்,பஞ்சாப் மாநிலத்தில் நெல் கொள்முதல்,10.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77.30 லட்சம் டன்னிலிருந்து, 85.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே போன்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் நெல் கொள்முதல், 32.30 லட்சம் டன்னிலிருந்து, 37.60 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.


அரியானா வாயிலான நெல் கொள்முதல், 25 சதவீதம் உயர்ந்து, 19.90 லட்சம் டன்னிலிருந்து, 25 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, ஒடிசா மாநிலத்தில் நெல் கொள்முதல், 55 சதவீதம் உயர்ந்து, 10.80 லட்சம் டன்னிலிருந்து, 16.80 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உத்தரபிரதேசம் வாயிலான கொள்முதல், 38 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 20.10 லட்சம் டன்னிலிருந்து, 12.50 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.


கையிருப்பு:நடப்பு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் கிடங்குகளில், நெல் கையிருப்பு, 3.22 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதே போன்று, கோதுமை கையிருப்பு, 3.44 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் ஒட்டு மொத்த தானிய கையிருப்பு, 6.66 கோடி டன் என்ற அளவில் உள்ளது.