தேடல்

தேனி மாவட்ட ஜல்லிக்கட்டு தேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி

தேனி:தேனி மாவட்டத்தில், பிப்., 3ல் பல்லவராயன்பட்டியிலும், பிப்., 10ல் அய்யம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இங்கு ஜல்லிக்கட்டு நடத்த தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாசில்தார், கால்நடை இணை இயக்குனர், கால்நடை டாக்டர்கள், டி.எஸ்.பி., மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், ஜல்லிக்கட்டு நடத்த, ஐகோர்ட் விதித்த இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ள 31 நடைமுறைகளையும், முழுமையாக அமல்படுத்த வேண்டும். மாடுகளை பதிவு செய்ய வேண்டும். நல்ல முறையில் தீவனம், குடிநீர் வழங்க வேண்டும். கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும். கொம்பு முனையில் பாதுகாப்பு கவர் அமைக்க வேண்டும். மாடுகளுக்கு மிளகாய்பொடி, சேறு, சகதி பூசக்கூடாது. சாராயம் உட்பட போதைப்பொருள் கொடுக்க கூடாது.
பார்வையாளர் மாடத்திற்கு பொதுப்பணித்துறை உறுதிச்சான்று பெற வேண்டும். ஒவ்வொரு மாடாக அனுப்பி வைக்க வேண்டும். மாடு பிடிப்பவர்கள் சீருடை அணிய வேண்டும். போதைப்பொருள் உட்கொள்ள கூடாது. தீயணைப்பு, மருத்துவ, பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.
இதனை முழுமையாக அமல்படுத்துவதாக ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து பிப்., 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பல்லவராயன்பட்டியிலும், பிப்., 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அய்யம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம், என அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.