தேடல்

தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு பேருந்து நிலையத்தில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுவதாலும், சிறு வியாபாரிகள் நடைபாதைகளைஆக்கிரமித்துள்ளதாலும், பேருந்துகள் மற்றும் பயணிகள் வந்து செல்வதில் சிக்கல் நிலவுகிறது.ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தை, 42 மாநகர பேருந்துகளும், 100க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் பயன்படுத்துகின்றன. இவற்றில் பயணம் செய்வதற்காக, தினமும், 25 ஆயிரம் பேர் இங்கு வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் வந்து, பேருந்துகள், பயணிகளை ஏற்றி செல்லவும், பயணிகள் காத்திருக்கவும் வசதியாக, 60 லட்சம் ரூபாய் செலவில், நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், பேருந்துகள் வந்து செல்லும் இடத்தை, தனியார்வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மேலும், சிறு வியாபாரி
களும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை போட்டுள்ளனர்.
இதனால், பேருந்துகள், பயணிகள் வந்து செல்ல சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் கடைகள் வைக்க கூடாது, வாகனங்கள் நிறுத்தக் கூடாது என, எச்சரிக்கை பலகை இருந்தும், வாகனங்களும், கடைகளும் அத்துமீறி செயல்படுகின்றன. தனியார் வாகனங்கள் மீதும், நடைபாதை கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. இதனால், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் வந்து செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.