தேடல்

பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டீசல் விலையை சிறிது மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற செய்தி வெளியானது.


இதையடுத்து, மதியத்திற்கு பிறகு வர்த்தகம் சூடுபிடித்தது. கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவாக, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெயை சந்தைப் படுத்தும் நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.


நேற்றைய வர்த்தகத்தில், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் , தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது.


மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 146.40 புள்ளிகள் அதிகரித்து, 19,964.03 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 20,005.98 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,783.41 புள்ளிகள் வரையிலும் சென்றது.


"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 37.35 புள்ளிகள் உயர்ந்து, 6,039.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,053.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,988.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.