தேடல்

பணக்காரர்களுக்கு அதிக வரி: விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆதரவு

டாவோஸ்: நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் சார்பில் மாநாடு ஒன்று நடந்து வருகிறது. 6 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், உலகிலுள்ள பல்வேறு பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், டாவோஸ் மாநாட்டில் கலந்து கொண்ட விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி தனியார் டி.வி., ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்கள் தங்களது சொத்தை தனிப்பட்ட ஒருவரின் சொத்தாக பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற ஏழை நாட்டில் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டிலுள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் தங்களது சொத்தை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்பவர்களாக மட்டும் இல்லாமல், சமுதாயம் தொடர்பாக, தங்களுக்கென சில பொறுப்புகளையும் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தங்களது சொத்தை இந்த சமுதாயத்திற்கான நன்றிக்கடனின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு பார்ப்பவர்களே தங்களது பதவியில் நீண்ட காலம் இருக்க முடியும் என்றும், அவ்வாறில்லாதவர்கள் சோஷலிசத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள பிரபல பொருளாதார வல்லுநர்கள் இங்குள்ள மிகப்பெரிய பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்துவதை சுட்டிக்காட்டியுள்ள அசிம் பிரேம்ஜி, எனினும் சில பெரிய நிறுவனங்கள் இதை எதிர்ப்பதாகவும், அத்தகைய வரி தங்களை நம்பிக்கையிழக்கச் செய்வதாக அவர்கள் கூறுவதாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தற்போது செய்து வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் சிறியவை என்றும், மிகவும் தாமதம் என்றும் வர்ணித்துள்ள அவர், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டது மிகவும் நல்ல முடிவு என்றும், எனினும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.