தேடல்

பஸ் நிலையங்களில் கழிப்பறை இல்லை மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

சென்னை:சென்னை பஸ் நிலையங்களில், கழிப்பறை வசதி இல்லை என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சவுந்திர ராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
சவுந்திரராஜன் - மார்க்சிஸ்ட்: சென்னையில் திருவேற்காடு, அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய இரு பஸ் நிலையங்களை தவிர, மற்ற பஸ் நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும், பெண் பயணிகளுக்கு அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை வசதியும் இல்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 28 பஸ் நிலையங்கள்
பராமரிக்கப்படுகின்றன. இதில், 26 பஸ் நிலையங்களில் கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிகளும் உள்ளன.
அய்யப்பன்தாங்கல், சுங்கச்சாவடி பஸ்நிலையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை இந்த ஆண்டில் செய்து கொடுக்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அந்த பணிகள் நடந்து வருகின்றன.
சவுந்திரராஜன்: கழிவறைகள் கூட, கட்டண கழிப்பிடமாக உள்ளது. அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பல இடங்களில் பெண்களுக்கு தனியாக கழிப்பறை வசதி இல்லை.
அமைச்சர்: 26 பஸ் நிலையங்களிலும், பெண் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளன. குடிநீர் வசதியும் உள்ளது.
சென்னையில் உள்ள, 18 பணிமனைகளில் ஓட்டுனர் ஓய்வு அறை, 6 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 115 பணிமனைகளில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஓட்டுனர் ஓய்வு அறை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஒரு பணிமனை கூட புதியதாக துவங்கவில்லை.
இந்த ஆட்சியில் ஏழு புதிய பணிமனைகளை, சென்னையில் துவக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான
டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.