தேடல்

பீ.எஸ்.இ., "சென்செக்ஸ்' 112 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு, பங்குச் சந்தை ஏற்றத்திற்கு, கை கொடுக்கவில்லை. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.


நேற்றைய வர்த்தகத்தில், நுகர்பொருட்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை காணப் பட்டது. அதேசமயம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.


மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 112.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19, 990.90 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 20,203.66 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,970.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஐ.டி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 24.90 புள்ளிகள் சரிவடைந்து, 6,049.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,111.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,042.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.