தேடல்

புதுகை நகராட்சி நூற்றாண்டு விழாவை முடக்க திட்டம்!

புதுக்கோட்டை: நகராட்சி நிர்வாகத்தின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை மேற்கோள்காட்டி,நூற்றாண்டு விழாவை முடக்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க.,வினர் துவக்கியுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி, 1912ம் ஆண்டு மன்னர் ஆட்சியின் போது உதயமானது. 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா தø லமையிலான அ.தி.மு.க., ஆட்சி நடப்பதால், நகராட்சி, நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாட அ.தி. மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர். நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுடன் கவுன்சிலர்களின் எண்ணிக்கையிலும் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், விழா கொண்டாடுவது எளிதான காரியம் என அ. தி.மு.க.,வினர் கருதியுள்ளனர்.
இதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளும் அ.தி.மு.க., வசம் இருப்பதும், அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் அமைச்சராக இருப்பதும் வலுசேர்ப்பதாக உள்ளது.
இதற்கிடையே புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நகராட்சி தலைவர் பதவியை கார்த்திக் தொண்டைமான் ராஜினாமா செய்தார். தற்போது அப்பொறுப்பை துணைத்தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான் வகித்து வருகிறார். இருந்தும் நூற்றாண்டு விழாவை திட்டமிட்டபடி கொண்டாடுவதெனவும், விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை பங்கேற்க செய்வதெனவும் அ.தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளனர்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக, நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர்ப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக, முதல்வர் ஜெயலலிதா சிறப்பு ஒதுக்கீடாக நகராட்சி நிர்வாகத்துக்கு, 50 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்த நிதியிலிருந்து சாலைப் பணிகளுக்காக மட்டும், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் தான் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.
நகராட்சி பொதுநிதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிதியின் மூலம் ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை, நூற்றாண்டு விழா சிறப்பு நிதியிலிருந்து போடப்பட்டதாக கணக்கு காண்பிப்பதாகவும், தேவையற்ற பணிகளுக்கு லட்சகணக்கான ரூபாய் விரையம் செய்வதாகவும், நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவை தவிர, 5 கோடி செலவில் நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ள நகராட்சி நிர்வாகம், இதற்கான வரைபடம், திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக, சென்னையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒருவருக்கு, 10 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேவையற்ற செலவுகளுக்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கும் நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் கைவிடவேண்டும். தவறினால் நகராட்சி நிர்வாகத்தின் ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, நகராட்சி நூற்றாண்டு விழாவுக்கு நீதிமன்றம் மூலம் தடையாணை பெறவும் தயங்கமாட்டோம் என தி.மு.க., கவுன்சிலர் அறிவுடைநம்பி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம், நூற்றாண்டு விழாவை முடக்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க.,வினர் துவக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. இவை அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.