தேடல்

பொங்கல் பொருட்கள் வினியோகம் நிறுத்தம் : விற்பனையாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு

விருதுநகர்: தமிழக அரசு சார்பில்,ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் இலவச பொருட்கள் வினியோகம்,விற்பனையாளர்களுக்கான வாய் மொழி உத்தரவால், நேற்று முதல் (ஜன.,17 ) நிறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு, அரசு சார்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, நூறு ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டம், முதல்வரால் ஜன. ,8 ல் துவக்கி வைக்கப்பட்டது.
பல மாவட்டங்களில் ஒதுக்கீட்டு உத்தரவு பெற்று, ஜன. 9, 10 ம் தேதிகளில் தான் துவக்கப்பட்டது. தாமதமாக துவங்கியதால், இலவச பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் கூட்டம் அலை மோதியது. இதில் பலர், பின்னர் வாங்கி கொள்ளலாம் என இருந்து விட்டனர். இது வரை, 80 முதல் 90 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் இருப்பு உள்ளன. இதனிடையே,இலவச பொருட்கள் வழங்குவதை நேற்று முதல் நிறுத்தி வைக்க, விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில்,பொங்கல் இலவச பொருட்கள் ஒதுக்கீட்டு உத்தரவு பெற்று, பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து சேர ,ஜன., 10 ம் தேதி வரை ஆகிவிட்டது.இருந்தும் ஜன., 13 வரை , 90 சதவீதம் வரை வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் கூறியதால், நேற்று முதல் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்களையும், பணத்தையும் என்ன செய்வதென, எந்த உத்தரவும் வழங்கவில்லை, என்றார்.