தேடல்

பி.சி.சி.ஐ.,க்கு வருமான வரி நோட்டீஸ் * ரூ. 2300 கோடி வரி கட்ட வேண்டும்

புதுடில்லி:பி.சி.சி.ஐ.,க்கு மீண்டும் ஒரு சிக்கல். ரூ. 2300 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி தப்புவது எனத் தெரியாமல் விழிக்கிறது.இந்தியாவில் அனைத்து விளையாட்டு அமைப்புகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கிரிக்கெட் மட்டும் தனியார் நிறுவனமான இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கீழ் உள்ளது. கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், முதலில் வருமான வரியில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்து இருந்தது.கடந்த 2006, ஜூன் 1 முதல் இதில் மாற்றம் கொண்டு வந்தது. பி.சி.சி.ஐ., செயல்பாடுகள் வர்த்தக பிரிவில் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் பின், உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக உள்ள பி.சி.சி.ஐ.,க்கும் மத்திய அரசுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகி விட்டது.திடீர் உத்தரவு:கடந்த 2008ல் ஐ.பி.எல்., அமைப்பு துவங்கி, பணம் கொட்டத்துவங்கிய பின், இது அதிகமானது. கடந்த 2003-04 முதல் 2009-10 வரை, அதாவது வருமான வரி விலக்கு இருந்த காலத்தையும் சேர்த்து, 7 ஆண்டுக்கு கிடைத்த அனைத்து வருமானத்துக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 2,300 கோடி வரி கட்ட வேண்டும் என, வருமான வரித்துறை இப்போது உத்தரவிட்டது.பி.சி.சி.ஐ., விவாதம்:இதுவரை ரூ. 1000 கோடி வரி செலுத்திய பி.சி.சி.ஐ., மீதமுள்ள தொகையை கட்ட மறுத்துள்ளது. செயற்குழு கூட்டத்தில் இதற்கு என்ன செய்யவேண்டும் என, விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான செய்தி:பி.சி.சி.ஐ., வருவாயில் மீடியா உரிமைகள், ஐ.பி.எல்., மற்றும் அதன் இணைப்பு நிறுவனங்கள் மூலம், 70 சதவீதம் வருமானம் கிடைத்தது. போட்டிகள் மூலம் கிடைத்தது 30 சதவீதம் தான். இதற்கு மட்டும் தான் வரி நிர்ணயிக்க வேண்டும்.ஒட்டுமொத்த பி.சி.சி.ஐ., வருமானத்தை கணக்கிடக் கூடாது. இதை தீர்க்க பி.சி.சி.ஐ., காசாளர் அஜய் ஷிர்கே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐ.டி., பிரச்னையில் அடுத்து என்ன செய்வது என, இரண்டு வாரத்தில் பி.சி.சி.ஐ.,யிடம் பதில் தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.சீனிவாசன் வியப்பு:பி.சி.சி.ஐ.,, தலைவர் சீனிவாசன் கூறுகையில், நான் 2005 முதல் 2008 வரை காசாளராக இருந்த போது, பி.சி.சி.ஐ.,க்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்து இருந்தனர். இது 2006 வரை தொடர்ந்தது. ஏதோ காரணத்துக்காக முடிந்து போன அனைத்தையும் திரும்ப கிளறி, வரி செலுத்துமாறு கூறுகின்றனர், என்றார்.இது எப்படி இருக்குபி.சி.சி.ஐ., தலைவராக சரத்பவார் இருந்த போது, மத்திய அரசுடன் சுமூக உறவு இருந்தது. தேசிய விளையாட்டு வளர்ச்சிக்காக அப்போது, மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., ரூ. 50 கோடி கொடுத்தது. இப்போது, இந்த பணம் எப்படி வந்தது என்று விளக்கம் தருமாறு மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.