தேடல்

பா.ஜ., தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜ்நாத் சிங்

புதுடில்லி: பா.ஜ.,வின் தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி, கடந்த மூன்று ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்து வந்தார். அவரின் பதவிக் காலம், கடந்த டிசம்பர் மாதம் முடிந்து விட்டதால், புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. இந்தத் தேர்தலில், நிதின் கட்காரியை மீண்டும் தேர்வு செய்ய, அத்வானி உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனத்தில், பல நிறுவனங்கள் போலி பெயரில் முதலீடு செய்திருப்பதாக, சமீபத்தில் புகார்கள் எழுந்ததே இதற்கு காரணம். இருந்தாலும், கட்காரியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலியுறுத்தியது. இதனால், தலைவர் தேர்வில் குழப்பம் நீடித்து வந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இந்நிலையில், இந்த விவகாரத்தில், நேற்றிரவு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. நிதின் கட்காரி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.அதில், எனக்கு எதிரான ஊழல் புகார்கள், எந்த வகையிலும், பா.ஜ., கட்சியை பாதிக்கக் கூடாது என, நினைக்கிறேன். அதனால், இரண்டாவது முறை, பா.ஜ., தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட திருப்பம் காரணமாக, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளவருமான, ராஜ்நாத் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் துவங்கின. இதன்படி, இன்று காலை டில்லியில் பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு முன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்தித்த ராஜ்நாத் சிங், பின்னர் நிதின் கட்காரியுடன் எம்.பி.,க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து கட்சியின் தலைவர்கள் புதிய தலைவர் தேர்வு குறித்து பேசினர். இறுதியாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ராஜ்நாத் கட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் முதிர்ந்த அனுபவம் உள்ளவர் என பாராட்டு தெரிவித்தார். மேலும், பதவியிலிருந்து வெளியேறும் கட்காரிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

இதையடுத்து, புதிய தலைவருக்கான வேட்புமனுவை ராஜ்நாத் சிங் தேர்தல் அதிகாரியான கெலாவட்டிடம் தாக்கல் செய்தார். அவருடன், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராஜ்நாத் சிங்கை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து ராஜ்நாத் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.