தேடல்

பெடரர், முர்ரே அபாரம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சுவிட்சர்லாந்தின் பெடரர், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர்.கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர்-2 வீரரான பெடரர், பிரான்சின் பெனாய்ட்டை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, நெதர்லாந்தின் ராபினை 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் பிரான்சின் சோங்கா, சக வீரர் மைக்கேலை, 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.பிற முதல் சுற்றுப் போட்டிகளில் அர்ஜென்டினாவின் ஜூவான் டெல் போட்ரோ, ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வெர்த், இத்தாலியின் ஆண்டிரியாஸ் செப்பி, ஜெர்மனியின் புலோரியன் மேயர் ஆகியோர் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.செரினா காயம்:பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் எடினா ஹாலை சந்தித்தார். போட்டியின் 19வது நிமிடத்தில் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் செரினா அவதிப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின் சிறப்பாக செயல்பட்ட செரினா 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றார்.மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, ருமேனியாவின் மோனிகாவை 6-1, 6-4 வீழ்த்தினார்.மற்ற போட்டிகளில் டென்மார்கின் வோஸ்னியாக்கி, ஸ்பெயினின் கார்லா நவாரோ, செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ரஷ்யாவின் எலினா, இத்தாலியின் ராபர்டா வின்சி ஆகியோர் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.