தேடல்

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதி

புதுடில்லி:பதப்படுத்தப்பட்ட ஒரு சில வேளாண் உணவுப் பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது.


அனுமதி:இக்கூட்டத்தில், குறிப்பிட்ட வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கோடு, முக்கிய முடிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதன்படி, பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ், மக்காச்சோளம், பால், வெண்ணெய், உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீதான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.இதனால், அயல்நாட்டினர், இந்திய ஏற்றுமதியாளர்களுடன், மேற்கண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை, நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த சில ஆண்டுகளாக, வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு, அடிக்கடி தடை விதித்து வந்தது.அவ்வப்போது தடை நீக்கப் பட்ட போதிலும், மத்திய அரசின் நிச்சயமற்ற கொள்கையால், இந்திய வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, அயல்நாட்டு வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இதனால், பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப் பொருட்களுக்கான, சர்வதேச சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்காத நிலை உள்ளது.


பால் பவுடர்:இதை கருத்தில் கொண்டு, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், கேசின் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு, தடை விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட வேளாண் பொருளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டாலும், அப்பொருளை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்ய, தற்போது வழி வகை செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பரில், வெங்காயம் விலை உச்சத்துக்கு சென்றதை அடுத்து, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், 550 கோடி ரூபாய் மதிப்பிலான, உலர வைக்கப்பட்ட வெங்காய சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது.சர்வதேச அளவில், பதப்படுத்தப் பட்ட வெங்காய சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு, 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது.


ஒட்டுமொத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச அளவில், பதப்படுத்தப்பட்ட வெங்காய சந்தையில், இந்தியா இழந்த வாய்ப்பை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொண்டன.அது போன்று, கடந்த 2011ம் ஆண்டு, பிப்ரவரியில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், "கேசின்' உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.இத்தடையை நீக்க வேண்டும் என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், பிரதமருக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில், சென்ற மாதம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் மற்றும் "கேசின்' பொருள்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.


நம்பகத்தன்மை:இது போன்று, தடை விதிப்பதும், நீக்குவதும், அயல்நாட்டு இறக்குமதி யாளர்களிடையே, இந்தியா மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாக அமைந்துள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியா, 608 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பால் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.உள்நாட்டில் கோதுமை உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, நான்கு ஆண்டுகளாக அதன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, கடந்த ஆண்டு மத்திய அரசு, நீக்கியது. இதனால், நடப்பு நிதியாண்டில், தற்போது வரை, 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


இதே போன்று, சென்ற நிதியாண்டில், சாதாரண அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அரிசி ஏற்றுமதிஇதனால், நடப்பு நிதியாண்டில், உலகிலேயே, அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் (பாசுமதி அரிசி, பழங்கள், பால் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவை) ஏற்றுமதி, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதியாண்டில், 82,480 கோடி ரூபாயாக இருந்தது.


இருந்த போதிலும், சர்வதேச சந்தையில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.இந்தியாவின், பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட, 15 நாடுகளின் பங்களிப்பு, 63 சதவீத அளவிற்கு உள்ளது.