தேடல்

பொதுப்பணித் துறைகுறுக்கீட்டுக்கு தடை

சென்னை:திருச்சி - காரைக்குடி மார்க்கத்தில், இரு வழி சாலை அமைக்கும் பணியில், பொதுப்பணித் துறை குறுக்கீடு செய்வதற்கு, சென்னை, ஐகோர்ட் தடை விதித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், திட்ட இயக்குனர், முத்துடையார் என்பவர், தாக்கல் செய்த மனு:திருச்சியில் இருந்து காரைக்குடி வரை, தேசிய நெடுஞ்சாலையில்,இருவழிப் பாதை அமைக்க, 374 கோடி ரூபாய்க்கு திட்டமிடப்பட்டது.இதுவரை, 65 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன; 275 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில், ஆறு, குளங்கள் குறுக்கிடுவதால், நீர் நிலைகளின் வழியாக, சாலை அமைக்க, தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு, பொதுப்பணித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பினோம்.உண்மை நிலையை கண்டறியாமல்,தடையில்லா சான்றிதழ் வழங்க கோரியதை, பொதுப்பணித் துறைச் செயலர் நிராகரித்து விட்டார். இந்த சாலை அமைவதால், நீர் நிலைகளுக்கு பாதிப்பு வராது. மாற்றுப் பாதை வழியாக, பணிகளை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார்.

தடையில்லாச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பின், கணிசமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன.இதற்காக, பல கோடி ரூபாய், செலவிடப்பட்டு விட்டது. தற்போது, பாதையில் மாற்றம் எதுவும் செய்ய இயலாது. அவ்வாறு மாற்றம் செய்தால், திட்டப்பணிகள் முடிய காலதாமதம் ஏற்படுவதோடு, கணிசமான இழப்பு ஏற்படும்.எனவே, திருச்சி - காரைக்குடி மார்க்கத்தில், குறிப்பிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதில், பொதுப்பணித் துறையின் குறுக்கீடுக்கு,தடை விதிக்க வேண்டும்.தடையில்லா சான்றிதழ் வழங்க, உத்தரவிட வேண்டும்.

பொதுப்பணித் துறை செயலரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், பொதுப்பணித் துறை குறுக்கீடு செய்வதற்கு, இரண்டு வாரங்களுக்கு, தடை விதித்ததோடு, விசாரணையை, இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.