தேடல்

பொருளாதார மேம்பாட்டு திட்டம் பயன் பெற கலெக்டர் அழைப்பு

அரியலூர்:

பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற, உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில்

விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் கலெக்டர்

செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில் தாட்கோ மூலம்

செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்கு, செப்., 24ம்

தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆதிதிராவிட தொழில் முனைவோர் பயன்பெறும்

வகையில், தனி மனித வருமானத்தை பெருக்கும் திட்டங்களை செயல்படுத்த

நடப்பாண்டு, 96 நபர்களுக்கு மானியம் வழங்க 1.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நிலம் வழங்குதல் மற்றும்

மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்,

இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல்

(எம்.பி.பி.எஸ்., பி.எஸ்., எம்.எல்., பட்டம் பெற்றவர்களுக்கு) பெட்ரோல்,

டீசல், காஸ் சில்லறை விற்பனை நிலையம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான

சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, துரித மின் இணைப்பு திட்டம், விருப்புரிமை

நிதி திட்டம், இந்திய குடிமை பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி

உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் குறித்து,

தாட்கோ இணையத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க

விரும்புவோர் http : // application. tahdco . com என்ற

இணையத்தளத்தில், அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஸ்கேன் செய்த

ஃபோட்டோ, ரேஷன் கார்டு எண், ஜாதி, வருமான சான்றிதழ் எண் மற்றும் நாள்,

குடியிருக்கும் வீட்டுக்கான மின் பகிர்மான அட்டை எண், திட்டத்திற்கான

விலைப்புள்ளி, கல்வி தகுதிக்கான சான்று உள்ளிட்ட விவரங்களுடன் ஆன்லைனில்

விண்ணப்பிக்கலாம். இதற்கு இந்து ஆதிதிராவிடர்களாக, 18 முதல் 55 வயது

வரையுள்ள, (இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வயது வரம், 18

முதல் 35 வரை) நபர்களின் குடும்ப ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்குள்

இருக்க வேண்டும். சிறப்புத் திட்டமான பெட்ரோல், டீசல், காஸ் சில்லறை

விற்பனை நிலையம் அமைக்க, குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய் வரை

இருக்கலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சரிபார்க்க, மாவட்ட

மேலாளரிடமிருந்து அழைப்புக் கடிதம் வந்த பின்னர் கொண்டு வந்தால் போதுமானது.

எனவே தகுதிவாய்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், மேலே

குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.