தேடல்

பிறந்த நாளில் "நினைவு' தினம் அனுஷ்டிப்பு: அ.தி.மு.க., வினர் அதிர்ச்சி

சேலம்: சேலம் கோட்டை பகுதியில், எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான நேற்று, நினைவு தினம் என்று அச்சடிக்கப்பட்ட ஃபோட்டோவை வைத்து வழிபாடு நடத்தி சென்றதால், அ.தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜனவரி 17 ம் தேதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளாகும். நேற்று அவரது, 96 வது பிறந்த நாள் விழா, மாநகர பகுதி முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், அ.தி.மு.க., வினர், எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு பொங்கல், கேசரி உள்ளிட்ட இனிப்புக்களை வழங்கினர்.
பல இடங்களில், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தி பரிசு மற்றும் நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. சேலம் மாநகரின் பிரதான பகுதியான, கோட்டை நுழைவு வாயிலுக்கு முன் உள்ள பெரியார் சிலை அருகில், நேற்று, 32 வது வார்டு அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆரின் உருப்படத்துக்கு மாலை அணிவித்து, வழிபாடு நடத்தினர்.
அதில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா என்பதற்கு பதிலாக, நினைவு தினம் என்ற வாசகம் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர், 24 ம் தேதி, எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று அவரது பிறந்த நாளில், முரண்பாடாக, அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரால், அப்பகுதி, அ.தி.மு.க., வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநகரின் பிரதான பகுதி என்பதாலும், பொங்கல் விடுமுறை முடிந்ததாலும், அந்த வழித்தடத்தில், நேற்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. நினைவு தினம் என்று போட்டோ வைக்கப்பட்டுள்ளதை பார்த்த பொதுமக்கள், பிறந்த தினமா அல்லது இறந்த தினமா என்று குழப்பம் அடைந்தனர்.