தேடல்

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் பாய்ச்சல் : அலங்காநல்லூரில் இன்று வீர விளையாட்டு

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில், பல வீரர்கள், காளைகளின் அருகிலேயே செல்லவில்லை. இதனால், காளை உரிமையாளர்கள் அதிக பரிசுகளை வென்றனர். திருச்சி பெரிய சூரியூரில் நடந்தஜல்லிக்கட்டில், 351 காளைகள் பங்கேற்றன. ஆக்ரோஷமாக பாய்ந்த காளைகளிடம் சிக்கி, 60 காளையர் படுகாயமடைந்தனர்.

மதுரை பாலமேட்டில், நேற்று காலை, 8:30 மணிக்கு, காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு விழா துவங்கியது. ஐந்து கோவில் மாடுகள், முதலில் விடப்பட்டன. இதில், 664 வீரர்கள் பதிவு செய்யப்பட்டு, 151 பேர் நீக்கப்பட்டனர்; மேலும், மது அருந்தியதால், 27 பேர் நீக்கப்பட்டனர். மொத்தம், 402 காளைகளில், 37 தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மதியம் 2:00 மணி வரை, 365 காளைகள் வாடி வாசலுக்கு அனுப்பப்பட்டன; வெளியே, 200க்கும் மேற்பட்ட காளைகள் காத்திருந்தன. நேரம் முடிந்ததால், பங்கேற்காத காளைகளை, உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் அழைத்துச் சென்றனர்.

இளைப்பாறிய வீரர்கள்:

ஜல்லிக்கட்டு துவங்கியவுடன், 100 வீரர்களுக்கு மேல், வாடி வாசலை சுற்றி நின்றனர். காலை, 10:00 மணிக்கு, இதில் பாதி பேர் ஆங்காங்கே ஓய்வெடுக்கத் துவங்கினர். பத்து காளைகள் வரை, களத்தில் நின்று, விளையாடின. சில காளைகளை மட்டும், வீரர்கள் விரட்டிப் பிடித்தனர்.ஏம்பா... மஞ்சள் பனியன் வாங்குறதுக்கா வந்தீங்க... போய் மாட்டைப் பிடிங்கப்பா... வேஸ்ட்டா நின்னு வேடிக்கை பார்க்காதீங்க. வீரா... மாடுபிடி வீரா... என, கிராம கமிட்டியினர், வீரர்களிடம் கெஞ்சல் தொனியில் உற்சாகப்படுத்தியும் பயன் இல்லை. காளையர்களின் உரிமையாளர்கள் அண்டா, பித்தளைப் பாத்திரம், கட்டில், பீரோ, சைக்கிள் உட்பட பரிசுகளை அள்ளிச் சென்றனர். பத்து வீரர்களுக்கு, லேசான காயம் ஏற்பட்டது. காளைகளின் வால், கொம்பைப் பிடித்து இழுத்த, 25க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் ஏராளமானா மாடுகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். உலகப்புகழ் பெற்ற போட்டி என்பதால் பெருமளவில் வெளிõநட்டு சுற்றுலா பயணிகளும் இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

திருச்சியில் படுஜோர்:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த, பெரியசூரியூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டை, கலெக்டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்து, கண்காணித்தார்.திருச்சி, தஞ்சை, புதுகை, மதுரை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களை சேர்ந்த, 351 காளைகள், ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளின் தரத்தை பொருத்து, தங்கக்காசு, சைக்கிள்,சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.பிடிபட்ட காளைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு, ஏறு தழுவிய வீரர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது. 50 காளைகள் வரையே பிடிப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மற்ற காளைகள், பிடிக்க வந்த காளையரை சிதறடித்துச் சென்றன.மாலை, 4:00 மணி வரை, நடந்த ஜல்லிக்கட்டில், 60 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த, ஒன்பது பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 20 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர், பெரிய சூரியூரில் திரண்டதால், ஊரே மக்கள் தலையாக காட்சியளித்தது.

வங்கா நரிநடத்த தடை:

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கூலமேடு கிராமத்தில், பொங்கல் பண்டிகையொட்டி,60 ஆண்டுக்கு மேல், ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.கூலமேடு அரசு நடுநிலைப் பள்ளி அருகில், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட, எஸ்.பி.,
அஸ்வின்கோட் னீஸ் தலைமையில், போலீசார், அதிகாரிகள்,ஜல்லிக்கட்டு விழாநடக்கும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அஸ்வின்கோட்னீஸ், நிருபர்களிடம் கூறிய தாவது:காலை, 11:00 மணிக்கு துவங்கி, மாலை 4:00 மணிக்குள் ஜல்லிக்கட்டு விழா முடிக்க வேண்டும். 125 காளைகளும், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு, கஞ்சா, மது போன்ற, போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கூலமேடு கிராமம் தவிர, மற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. மேலும், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் மேட்டூர்பகுதியில், வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, வங்கா நரி பிடித்து வந்து, விழா நடத்தினால், சம்பந்தப்பட்ட நபர்களை, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -