தேடல்

மன்மோகன் மீது கூடத்தான் ஊழல் புகார் இருக்கு: சொல்கிறார் ரப்பானி கர்

நியூயார்க்: இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீது கூட பெரிய பெரிய ஊழல் புகார் இருக்கின்றது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் எரிசக்தித்துறையில் நடந்த ஊழல் காரணமாக, அந்நாட்டு பிரதமர் ராசா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டு தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய இரண்டாவது பாகிஸ்தான் பிரதமர் ராசா பர்வேஸ் அஷ்ரப் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக பிரதமர் பதவியில் இருந்த யூசுப் ராசா கிலானி, அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க கால தாமதம் செய்ததாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்திருந்தது. இதையடுத்து கிலானி பிரதமர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த ஏசியா சொசைட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரிடம், பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நிருபர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரப்பானி, ஊழல் என்பது பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவில் கூட அதன் பிரதமர் மன்மோகன் சிங் மீது பெரிய பெரிய ஊழல் புகார்கள் உள்ளன என தனது பிரதமருக்கு வக்காலத்து வாங்கி பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.