தேடல்

மரக்காணத்தில் கோஷ்டி மோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு: 7 பேர் படுகாயம்

மரக்காணம்: மரக்காணம் அருகே, மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், பெட்ரோல் குண்டு வீசியதில், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை, பனிச்சமேடு மீனவ கிராமங்களில், கடந்த மாதம், மீனவர்கள் சங்க தேர்தல் தொடர்பாக பிரச்னை எழுந்தது. அப்‌போது ஏற்பட்ட மோதலில் 15 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பனிச்சமேடுகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் தலையில் (ஹெல்மெட்) கவசம் மாட்டிக் கொண்டு கற்களை வாரி கீழ்பேட்டை மீனவர்கள் மீது வீசினர். பின் இரு தரப்பினரும் சுலுக்கி, ஈட்டியால் தாக்கிக் கொண்டு, பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் கீழ்பேட்டைகுப்பத்தைச் சேர்ந்த பூபாலன், 26; பாலமுருகன், 31; உட்பட, 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.