தேடல்

மேற்கத்திய கலாச்சாரமே பாலியல் குற்றங்களுக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர்

புதுடில்லி: நாட்டில் மேற்கத்திய கலாச்சாரம் பெருகி வருவதே பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கக்காரணம் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பாலியல் குற்றங்கள் நாட்டின் நகர்ப்புறங்களில் அதிகம் நடந்து வருவதாகவும், கிராமப்புறங்களில் இத்தகைய குற்றங்கள் குறைவாக நடப்பதாகவும் தெரிவித்தார். நகரங்களில் பெருகி வரும் மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாகவே இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறுகையில், பெண்கள் ஒரு சில நெறிமுறை வரம்பிற்குள் வாழ வேண்டும் என்றும், அந்த வரம்பை மீறும் பெண்கள் இப்படித்தான் தண்டனைக்குள்ளாவார்கள். லட்சுமணன் ரேகையை மீறிய சீதாவின் கதி தான் இத்தகைய பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறியுள்ளார். பா.ஜ., எம்.பி.,யின் இந்த பேச்சு புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, பாலியல் குற்றங்களுக்கு எதிரான அலையில் தங்களது கட்சியின் இமேஜை காப்பாற்ற அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. அசாமில், இரண்டு குழந்தைகளின் தாயை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதே போல், திரிணமுல் காங்கிரஸ் கட்சி துவக்க நாள் விழாவில் பெண்களின் குத்தாட்டமும், அவர்கள் மீது அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பணமழை பொழிந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின் அவர் மீதும் கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.