தேடல்

முதல்வருக்கு தொல்லை கொடுக்கும் புறாக்கள்

சென்னை:முதல்வர் வீட்டு அருகில் உள்ள, தொலைக்காட்சி அலுவலக வளாகத்தில், ஏராளமான புறாக்கள் உள்ளன. அவற்றின் கூச்சலில், முதல்வருக்கு அமைதி குலைவதால், லேசர் கருவி மூலம், பறவைகளை விரட்ட திட்டமிடப் பட்டு உள்ளதாக தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம், போயஸ் கார்டனில் உள்ளது. அவரின் வீட்டிற்கு அருகில், ஜெயா தொலைக்காட்சியின், அலுவலகம் செயல்படுகிறது. அதன் வளாகத்தில் உள்ள மரங்களில், 200க்கும் மேற்பட்ட புறாக்கள், கூடு கட்டி வாழ்கின்றன.
இவை எழுப்பும் சப்தம், முதல்வரின் அமைதியை குலைப்பதாக இருந்ததால், அவற்றை பிடிக்க, முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேளச்சேரி வனச்சரகத்தை சேர்ந்த வனத் துறையினர், இரண்டு நாட்களாக, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, வலை விரிவில் தீனி போட்டு, பறவைகளை பிடிக்க முடிவு செய்தனர்.
கடந்த, 22ம் தேதி முதல் நடந்த முயற்சியில், நேற்று வரை, 40 பறவைகள்
மட்டுமே பிடிக்க முடிந்தது.
அந்த பறவைகளை, அடர்ந்த வனப்பகுதியில், வனத்துறையினர் விட்டுள்ளனர்.
பறவைகள் பெரிய அளவில் சிக்காமல் இம்முயற்சி தோல்வியடைந்ததால், அடுத்த கட்டமாக, பறவைகளை வெகு தொலைவிற்கு துரத்தும், லேசர் கருவிகளை கையாள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, மும்பையில் இருந்து,
பறவைகளை விரட்டும், லேசர் கருவி
வரவழைக்கப்பட்டு உள்ளதாக கூறப்
படுகிறது.
ஆனால், இத்தகவலைவனத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பறவைகளை விரட்டும் லேசர் கருவி: வெளிநாடுகளில், பறவைகளுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல், அவற்றை விரட்டும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, லேசர் கருவிகள்.
இந்த கருவி மூலம், பறவை கூட்டத்தை, நொடிப்பொழுதில் விரட்டிவிடலாம். விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில், பறவைகளை தொலைதூரம் விரட்ட, இந்த லேசர் கருவி பயன்படுத்தப்படுகிறது.