தேடல்

தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் போர்க்கொடி

சென்னை:தேர்வுகளில், அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றக் கோரி, மருத்துவ கல்லூரி மாணவர்கள்,மாநிலம் முழுவதும் இன்று முதல், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டுவந்தது.இதன்படி, எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒரு பாடத்தில் உள்ள, தலா இரண்டு தாள்களை சேர்த்து, குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என்ற நடைமுறைக்கு பதிலாக, எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளில், தனித்தனியாக, 50சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் தரப்பில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறையின்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிட்டது.இந்த புதிய விதியை,மருத்துவ பல்கலைக்கழகம், உடனே திரும்ப பெற வலியுறுத்தி,மாநிலம் முழுவதும் இன்று, மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.தமிழ்நாடு, பல்மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலர் அருளப்பராஜ் கூறியதாவது:இந்த புதிய விதிமுறையால், முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதேபோன்று, கடந்த ஆண்டும் புதிய விதிமுறைகளை விதித்ததால், ஏராளமான மாணவர்கள், தேர்வில் தோல்வி அடைந்தனர்.தேர்வுகளில், மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றும்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தை வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், கூட்டமைப்பு மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு, நேற்று முன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.இந்த ஆண்டு வெளியிட்ட தேர்வு முடிவை, மருத்துவ கவுன்சில் விதிமுறையின்படி, திருத்தி வெளியிட வேண்டும். மருத்துவ பல்கலைக்கழகம், புதிய விதியை கைவிட வேண்டும்.
இதை, நிறைவேற்றும் வரை, இன்று முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில், அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் ஈடுபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.