தேடல்

தமிழக எல்லையை தொடவில்லை காவிரி நீர்: அதிகாரிகள் அதிர்ச்சி

மேட்டூர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, காவிரியில் திறக்கப்பட்ட 10 ஆயிரம் கனஅடி நீர் இதுவரை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடையவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போன நிலையில், தற்போது சம்பா பயிர் கருகும் தறுவாயில் உள்ளது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்புப்படி, ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை கர்நாடக அரசு 183.57 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 55.607 டி.எம்.சி., மட்டுமே தண்ணீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. இன்னமும் 127 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டியுள்ளது. இந்நிலையில், சம்பா பயிர்களை காப்பாற்ற, நடுவர் மன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் பி லோகூர் அடங்கிய பெஞ்ச், தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 281 கி.மீ., தூரத்தில்மேட்டூர் அணை உள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து திறக்கப்படும் நீர், மழைக்காலத்தில் இரண்டு நாளில் மேட்டூர் அணையை வந்தடையும். கோடைகாலத்தில் மூன்று நாட்களுக்குள் மேட்டூர் அணைக்கு வந்துசேரும். நடப்பாண்டு காவிரியாறும் வறண்டதால், நேற்று முன்தினம் இரவு, கர்நாடகா காவிரியில் நீர்திறந்த நிலையில், இன்று மாலை வரை, மேட்டூர் அணை மேல்பகுதியில் மத்திய நீர் ஆணைய அளவீடு மையம் உள்ள, பீலிகுண்டுலு பகுதியை கூட தண்ணீர் வந்தடையவில்லை. எனினும், கர்நாடகா திறந்த நீர், நாளை அதிகாலை மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம், 48.450 அடியாகவும், நீர் இருப்பு, 16.850 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. விநாடிக்கு, 3,287 கனஅடி நீர் வந்தது. கர்நாடகா திறந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேராத நிலையில், டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு, 10 ஆயிரம்கனஅடி நீர் வெளியேற்றுவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவது, பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், விவசாயிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.