தேடல்

தமிழக பா.ஜ., புதிய தலைவர் யார்?

சென்னை: தமிழக பா.ஜ.,வின் புதிய தலைவர், இன்று தேர்தல் மூலம் தேர்வு செ#யப்படுகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், பா.ஜ.,வின் உட்கட்சி தேர்தல், கடந்த, இரு மாதங்களாக நடந்து வருகிறது. கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளன. இறுதியாக, மாநில தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. இதோடு, தேசிய குழுவுக்கு, தமிழகத்திலிருந்து, 39 பேர் தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடக்கிறது. மாநிலத் தலைவராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என, தெரிகிறது. போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படலாம் என்றும், பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் ஒரு பதவியில் ஒருவர், மூன்றாண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை சமீபத்தில் திருத்தியுள்ளனர். இதன்மூலம், ஒருவர் ஒரு பதவியில், ஆறு ஆண்டுகள் தொடர முடியும். இதன்மூலம், பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வாவது உறுதி என்றும் கூறுகின்றனர். தேசிய குழுவுக்கும், போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என, தெரிவிக்கின்றனர். கட்சியின் மாநில துணைத் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் நியமன அடிப்படையில் நடப்பதால், தலைவர் தேர்தலுக்குப் பிறகு, மாநில நிர்வாகிகள் நியமனம் நடக்கும் என்றும், பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.