தேடல்

உயர்கிறது டீசல் விலை?: இம்முறை காஸ், மண்ணெண்ணெய்யும் தப்பாது

புதுடில்லி: நிதிப்பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி அறிக்கையை தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இதையடுத்து,பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கு தேவையான பரிந்துரைகளை அளிக்க மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் விஜய் கேல்கர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த அறிக்கையில், உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துதல் மற்றும் வரும் 2014 -15ம் ஆண்டிற்குள் டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையையும் உயர்த்த இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கமிட்டி அறிக்கையின் படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, விஜய் கேல்கர் கமிட்டி அறிக்கை, தற்போது திட்ட அளவில் மட்டுமே உள்ளதாகவும், இதுகுறித்து மத்திய அமைச்சரவையே இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போது டில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 47.15 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கேல்கர் கமிட்டி அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 5.63 வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கடந்த 2011 ஜூன் முதல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. கேல்கர் அறிக்கைக்குப்பின், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மானிய விலையில் 6 காஸ் சிலிண்டர் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்