தேடல்

ரஜினி, கமல் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசு திரைப்படக் கலைஞர்களுக்கு 12.36 சதவிகிதம் சேவை வரி விதித்துள்ளது. இதைக் கண்டித்து நாளை (7ம் தேதி) திரையுலகினர் மற்றும் தொலைக்காட்சித் துறையினர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினியும் கமலும் கலந்து கொள்கிறார்கள் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சேவை வரியிலிருந்து வழக்கறிஞர்களுக்கு, டாக்டர்களுக்கு, விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள். சினிமா துறையில்கூட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் கலைஞர்களுக்கு மட்டும் தரவில்லை. நாங்கள் ஏற்கெனவே 33 சதவிகிதம் வருமானவரி செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் மேலும் வரி விதித்தால் எங்கள் வருமானத்தில் பாதியை வரியாக கட்ட வேண்டியது வரும். அதை நாங்கள் தயாரிப்பாளர் தலையில்தான் வைப்போம். இதனால் திரைப்படத் தொழில் நசியும். நாங்கள் பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம். இதில் சின்னத்திரை, பெரிய திரை கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொள்வதாக சொல்லியிருக்கிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 7ம் தேதி காலை 8 மணி முதல் 5 மணி வரை போராட்டம் நடக்கிறது. தியேட்டர்கள் இயங்காது. படப்பிடிப்பு நடக்காது. தமிழக அரசிடம் உண்ணாவிரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம் என்றார்.