தேடல்

ரஜினி பிறந்தநாளுக்கு லதா ரஜினிகாந்த் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் கிப்ட்!!

இந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி ரொம்பவே சிறப்பான ஆண்டு. காரணம் தேதி, மாதம், வருடம்(12.12.12) என மூன்றுமே 12-ல் வருகிறது. அதுமட்டும் இன்றி அன்றைய தினம் தமிழ் சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளும் கூட. பொதுவாகவே ரஜினி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் அவரது ரசிகர்கள், இந்தாண்டு இப்படியொரு(12.12.12) சிறப்பு தினத்தில் வருவதால் இந்த பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

அன்றைய தினம், ஏ.வி.எம்., தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து ஏற்கனவே சூப்பர்ஹிட்டான சிவாஜி படம் இப்போது 3டியில் உருவாக்கப்பட்டு, அவரது பிறந்தநாளிலேயே ரிலீசாக இருக்கிறது. சிவாஜி 3டி படமே இந்தாண்டு ரசிகர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசு என்று ஏற்கனவே ரஜினி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாளில் ரஜினியை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. கார்த்தி-அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள அலெக்ஸ் பாண்டியன் (மூன்று முகம் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர்) படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகரான நடிகரும், நடன மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ரஜினி ஆல்பம் என்ற பெயரில் அவரது பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார். இப்படி பலரும் இந்தாண்டு ரஜினியை கவுரவித்து வர ஏற்பாடு செய்து வரும் நிலையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் தனது கணவருக்காக பெரிய கிப்ட் ஒன்றை கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் உருவாக்கியுள்ள இது ரஜினி சாங் என்ற ஆல்பம் வெளியிட்டு விழாவில் பங்கேற்று, ஆல்பத்தை வெளியிட்டு பேசிய லதா ரஜினிகாந்த், 12.12.12 அன்று உலகமே கொண்டாடும் ஒருநாளில் எனது கணவர் பிறந்தநாள் வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பலரும் பலவிதமாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். நான் என்ன செய்ய போகிறேன் என்றால், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கொடுக்க போகிறேன். அது என்ன கிப்ட் என்று அவரது பிறந்தநாளுக்கு முந்தைய தினமான 11ம் தேதி அறிவிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.