தேடல்

தரை தட்டிய கப்பலை மீட்கும் பணி நாளை துவங்கும்

சென்னை:தரை தட்டிய கப்பலை மீட்க, மும்பையிலிருந்து, இழுவைத் திறன் அதிகமுள்ள மீட்புக் கப்பல், இன்று சென்னைத் துறைமுகம் வருகிறது. மீட்புப் பணிகள், திட்டமிட்டப்படி நாளை தொடங்குகிறது. மீட்பு குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்துள்ளது. நீலம் புயலில் சிக்கி, சென்னை மெரீனா அருகே, பிரதீபா காவேரி கப்பல் தரை தட்டி ஒரு வாரம் ஆகிறது. கப்பல் மூழ்கிவிடும் என்ற அச்சத்தில், படகில் தப்ப முயன்ற, இன்ஜினியர் ஆனந்த் உள்ளிட்ட ஆறு பேர், அலையில் சிக்கி, பரிதாமாக இறந்தனர்.
ஆழம் குறைவான பகுதியில், கப்பல் தரை தட்டியுள்ளதால், மீட்பது சவால் நிறைந்ததாக இருக்கும் என, கருதப்படுகிறது. மீட்புக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் நிபுணர் குழு வந்து, ஆய்வு நடத்தி வருகிறது.
மீட்புப் பணிக்கு பயன்படுத்த, சென்னைத் துறைமுகத்தில், நான்கு இழுவைக் கப்பல்கள் இருந்தாலும், குறைந்த திறன் கொண்டவை என்பதால், இழுவைத் திறன் அதிகமாக உள்ள மீட்புக் கப்பல்கள் தேவை என்ற, கருத்து முன் வைக்கப்பட்டது.மற்றொரு கப்பல்இதையடுத்து, ஆந்திர மாநிலம், காக்கி நாடாவிலிருந்து, மாளவிகா என்ற, மீட்புக் கப்பல் நேற்று முன்தினம் சென்னைத் துறைமுகம் வந்தது. இது, துறைமுகத்தின் வெளிப்புறப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், மும்பையிலிருந்து மற்றொரு அவசரகால மீட்புக் கப்பல், ரத்னா ஐந்து நாட்களுக்கு முன் புறப்பட்டது. இன்று மாலைக்குள் துறைமுகத்தை வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மீட்புக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி, நாளை காலை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் கசிவா?தரை தட்டிய கப்பலில், 360 டன் டீசல் உள்ள நிலையில், கசிவு ஏற்பட்டுள்ளதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவ்வாறு எந்த கசிவும் இல்லை; மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி தொடங்கும், என, துறைமுக அதிகாரிகள் கூறினர்.மீட்புப் பணிகள் செய்வது தொடர்பாக, கடல்சார் வணிக அதிகாரிகள், நிபுணர் குழு, கடலோர காவல் படை, துறைமுகம் உள்ளிட்ட, சார்புடைய துறைகளின், ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்துள்ளது.இதில், எந்த வகையில் படிப்படியாக மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களைத் தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்து விட்டனர்.விசாரணை தொடரும்மீட்புப் பணிகள் ஒரு பகுதியில் நடக்கும் அதே வேளையில், கடல் சார் வணிகத்துறை இணை இயக்குனர் கவுதம் சட்டர்ஜி தலைமையிலான குழுவின் விசாரணை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு, நான்கு நாட்களாக கப்பல் ஊழியர்கள், கப்பல் நிறுவன அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள், கடலோர காவல் படையினர் என, பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.