தேடல்

திருட்டில் இருந்து காரை காப்பாற்ற என்ன வழி?

பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கிய கார், காணாமல் போனால், அதன் உரிமையாளர்கள் படும் வேதனை, வார்த்தைகளில் அடங்காது. அதன் பிறகு, போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுப்பது, சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுப்பது என, அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அன்றாட பணியை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். இப்பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, காரில், பாதுகாக்கும் கருவிகளை பொருத்தி கொள்வது அருமையான விஷயம். விலை உயர்ந்த சொகுசு கார்களில், இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். விலை குறைந்த கார்களில், அதன் உரிமையாளர்கள் தான், இந்த விஷயத்தில், தனிப்பட்ட முறையில் அக்கறை காட்ட வேண்டும்.


கார் பாதுகாப்பை பொருத்தவரை, மெக்கானிக்கல் கருவி அல்லது இக்னிஷியன் கட் ஆஃப் கருவி போன்றவை உள்ளன. மெக்கானிக்கல் கருவியை பொருத்தவரை, கார் ஓட்ட பயன்படும், கியர் மற்றும் ஸ்டியரிங் வீலை, அசைக்க கூட முடியாத அளவுக்கு பொருத்த கூடிய ஒன்றாக இருக்கும். இக்னிஷியன் கட் ஆஃப் கருவி என்பது, பேட்டரியில் இருந்து இக்னிஷியனுக்கு, பவர் சப்ளை செல்வதை தடுக்க கூடிய அளவில், ரகசியமாக பொருத்த கூடிய கருவியாக இருக்கும். இந்த இரண்டு கருவிகளையும், கார் உரிமையாளர்கள் பொருத்தி கொள்ளலாம். இதை தவிர்த்து, பேஸிக் அலாரம், இன்ஜின் கண்ட்ரோல் மேடூல்( இ.சி.எம்.,) , ஜி.பி.எஸ்., மற்றும் இன்டிலிஜென்ட் கம்ப்யூட்டரைஸ்டு ஆன்டி -தெப்ட்( ஐ.சி.ஏ.டி.,) ஆகிய நவீன கருவிகளும் உள்ளன.


இதில் பேஸிக் அலாரம் கருவியின் விலை ரூ.3,000லிருந்து, ரூ.4,000 வரை இருக்கலாம். இ.சி.எம்., கருவியின் விலை ரூ.10,000 வரை இருக்கலாம். ஆனால், காரில் பொருத்தப்படும், இ.சி.எம்., கருவிகளையே சிலர் திருடிச் சென்று விடுகின்றனர். இந்த கருவி திருடப்பட்டு விட்டால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து, மொத்த விலையில் பாதி அளவுக்கு தான், தொகை திருப்பி அளிககப்படுகிறது. எனவே, இந்த கருவியை, கார் கதவை திறந்த உடனே கண்ணில் தெரியும் அளவுக்கு பொருத்தாமல், ரகசிய இடத்தில் பொருத்தி கொள்ளலாம். இத்துடன், காருடன் சேர்த்து, வெல்டிங் செய்து விட்டால், இந்த கருவியை அகற்றுவது கடினமாக ஒன்றாக இருக்கும்.


ஜி.பி.எஸ்., கருவி மற்றும் ஐ.சி.ஏ.டி., சென்சார் கருவிகளின் விலை, ரூ.17,000 வரை, தரத்துக்கு ஏற்றவாறு இருக்கிறது. இதில், ஜி.பி.எஸ்., கருவியை காரில் பொருத்திய பிறகு, திருட்டு சாவி போட்டு இக்னிஷியனை ஆன் செய்தால், கார் உரிமையாளருக்கு மெசேஜ் மூலம், உடனே தகவல் சென்று விடும். அத்துடன், இன்டர்நெட் மூலம், கார் செல்லும் பாதையை கண்டுபிடித்து விடலாம். ஐ.சி.ஏ.டி., சென்சார் கருவி என்பது, கார் சாவியில் ஒரு "சிப்' பொருத்தப்பட்டு இருக்கும். அதில், தனித்துவம் வாய்ந்த எலக்ட்ரானிக் அடையாளம் மற்றும் ரகசிய கோடும் இருக்கும். இந்த சாவியை போட்டு ஆன் செய்தால் தான், காரை இயக்க முடியும். திருட்டு சாவியை போட்டு காரை இயக்க முயன்றால், சென்சார் மூலம், கார் உரிமையாளருக்கு உடனடியாக தகவல் சென்று விடும். இதுபோன்ற பாதுகாப்பு கருவிகளை பொருத்தினால், இன்ஷூரன்ஸ் பிரிமியம் தொகையில், 2 முதல் 3 சதவீதம் வரை குறையவும் வாய்ப்பு உள்ளது.