தேடல்

திருமண நிதி பெற விண்ணப்பித்தவருக்கு இரு வாரங்களில் உதவி வழங்க உத்தரவு

சென்னை: மகள் திருமணத்துக்காக, உதவித் தொகை கேட்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவருக்கு, இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர், சங்கர்; ஆட்டோ டிரைவர்; இவரது மகள் தேவி. கடந்த ஆண்டு, அக்., மாதம், தேவிக்கு திருமணம் என, நிச்சயிக்கப்பட்டது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் (24 ஆயிரம் ரூபாய்கான காசோலை, தாலிக்கு, நான்கு கிராம் தங்கம்), பரங்கிமலை கமிஷனரிடம், விண்ணப்பித்தார். வருமான சான்றிதழை, ஒரு வாரத்தில் சமர்பிக்கும்படி, கமிஷனர் உத்தரவிட்டார்; ஆனால், பிப்., 22ம் தேதி தான், வருமான சான்றிதழ் சமர்பிக்கப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டு, நவ., மாதம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கமிஷனரிடம் இருந்து, ஜன., வரை, வருமான சான்றிதழ் தாக்கல் செய்யாததால், மனு நிராகரிக்கப்பட்டது என, தகவல் வந்தது. இதையடுத்து, கமிஷனரின் உத்தரவை ரத்து செய்யவும், திருமண நிதி உதவி வழங்கவும் கோரி, சென்னை ஐகோர்ட்டில், சங்கர் மனுத் தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் ஆஜரானார். நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
திருமண நிதி உதவி கோரி, கடந்த ஆண்டு, அக்., 27ம் தேதி, விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு, பிப்., 22ம் தேதி, வருமான சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தான், வருமான சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. எனவே, கால தாமதமாக விண்ணப்பத்தை அனுப்பியதாக கூற முடியாது. நிதி உதவி பெறுவதற்கு, தேவையான நிபந்தனைகள் அனைத்தையும், மனுதாரர் பூர்த்தி செய்துள்ளார். எனவே, கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களில், நிதி உதவிக்கு, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கமிஷனர், ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.